Advertisment

டெல்லியில் 2ஜி வெற்றி விழா? ராகுல் காந்தி தலைமையில் முதல் காரிய கமிட்டியில் இன்று விவாதம்

காங்கிரஸுக்கு ராகுல் காந்தி தலைவரான பிறகு முதல் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. 2ஜி வெற்றி விழா நடத்துவது குறித்து விவாதிக்கிறார்கள்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rahul Gandhi, dmk, congress, lok sabha election, கனிமொழி, ராகுல் காந்தி, திமுக

Rahul Gandhi, dmk, congress, lok sabha election, கனிமொழி, ராகுல் காந்தி, திமுக

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைவரான பிறகு முதல் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. 2ஜி வெற்றி விழா நடத்துவது குறித்து விவாதிக்கிறார்கள்.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் தலைவராக அண்மையில் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்படுவதற்கு ஓரிரு தினங்கள் முன்பு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. நான்கு கட்டங்களாக அங்கு ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தும், 22 ஆண்டு கால பாஜக.வின் ஆட்சியை வீழ்த்த முடியவில்லை.

ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ஏற்றதுமே இந்தத் தோல்வியைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த தேர்தல்களைவிட அதிக ‘சீட்’களை குஜராத்தில் வென்றுவிட்டதாக வெளியே மார்த்தட்டிக் கொண்டாலும், ஜெயிக்க வேண்டிய தருணத்தில் கோட்டை விட்டது சோகம்தான். அதேபோல 10 ஆண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஹிமாசல பிரதேசமும் கை நழுவிப் போயிருக்கிறது.

இந்திய அளவில் 19 மாநிலங்களில் பாஜக.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சிக் கட்டிலில் இருக்கின்றன. இந்தச் சூழலில்தான் 2ஜி தீர்ப்பில் கனிமொழி, ஆ.ராசா உள்பட குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் விடுதலை செய்திருக்கிறார்கள். இது காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட வழக்குதான் என்றாலும், 2014 தேர்தலில் இதை பிரசாரமாக முன்வைத்து பாஜக ஜெயித்தது.

எனவே 2ஜி வழக்கில் கிடைத்திருக்கும் விடுதலையை முந்தைய ஐ.மு.கூட்டணி அரசுக்கு கிடைத்த நற்சான்றிதழாக காங்கிரஸ் எடுத்துச் செல்ல விரும்புகிறது. அந்த அடிப்படையிலேயே காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் 2ஜி விடுதலை தீர்ப்பை வரவேற்றி அறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில் ராகுல் தலைவரான பிறகு முதல் முறையாக டெல்லியில் இன்று (22-ம் தேதி) காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் எதிர்கால சவால்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அடுத்து வரவிருக்கிற கர்நாடக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, பாஜக அரசின் தோல்விகளை வலுவாக பிரசாரம் செய்வது குறித்து விவாதிக்கப்படுகின்றன.

2ஜி வழக்கில் விடுதலை ஆகியிருப்பதை வெற்றி விழாவாக கொண்டாடுவது குறித்த ஆலோசனையும் இதில் இடம் பெற இருப்பதாக கூறுகிறார்கள். தேசிய அளவில் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை அந்த விழாவில் பங்கேற்க வைக்க திட்டம் இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. நேற்று தீர்ப்பு வெளியான பிறகு டெல்லியில் கனிமொழி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது இது குறித்தும் விவாதித்ததாக கூறுகிறார்கள்.

ஆனாலும் இந்த விஷயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவைப் பொறுத்தே திமுக.வின் பங்களிப்பு இருக்கும். திமுக.வின் ஒத்துழைப்பைப் பொறுத்தே காங்கிரஸின் இறுதி முடிவும் அமையும் என்கிறார்கள். டெல்லிக்கு பதிலாக சென்னையில் விழா நடத்தும் முடிவுக்கு திமுக வரலாம் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

 

Dmk Rahul Gandhi Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment