நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையா இல்லையா என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் இத்தேர்வினை எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'தனியார் கல்வி பயிற்சி நிறுவனங்கள் சம்பாதிப்பதற்காகவே இந்த நீட் தேர்வு நடத்தப்படுவதாகவும், ஏராளமான கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் பயிற்சி மையங்களை அமைத்து மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டி வருகின்றன. இத்தகைய பயிற்சி மையங்களை மாவட்டத் தலைநகரங்கள் வரை விரிவுபடுத்துவதற்கு அந்நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாகவும்' கூறியிருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த 7-ஆம் தேதி நடந்த நீட் தேர்வின் போது, சோதனை எனும் பெயரில் நடந்த கூத்தினை நாம் அறிவோம். பல மாணவர்கள் சட்டையைக் கிழித்து, தேர்வு எழுதிய அவலங்களும் அரங்கேறியது.
இந்த சம்பவம், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவே மாறிப் போனது. இதையடுத்து, இச்சம்பவம் 'தெரியாமல் நடந்துவிட்டது' என சிபிஎஸ்சி வருத்தம் தெரிவித்தது. இருப்பினும், சிபிஎஸ்சி நிர்வாகம் மீது மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது.
குறிப்பாக, கேரளாவின் கண்ணூரில் தேர்வு எழுத வந்த பெண் ஒருவரை, மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த போது 'பீப்' சத்தம் வந்தது. அப்பெண் அணிந்திருந்த உள்ளாடையில் இருந்த மெட்டல் கொக்கியினால் அந்த சத்தம் வந்தது. அப்பெண்ணின் உள்ளாடையை கழ ற்றி பெற்றோரிடம் கொடுத்த பின்னரே, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அப்பெண்ணின் உள்ளாடையை கழட்டச் சொன்ன ஷீஜா, ஷஃபினா, பிந்து, ஷாஹினா ஆகிய நான்கு ஆசிரியர்களை அப்பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. ஒருமாத காலம் அவர்கள் நால்வரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.