காங். எம்.எல்.ஏ.க்கள் பார்சல் : பெங்களூரு ‘ரிசார்ட்’டில் இருந்து குஜராத் ‘ரிசார்ட்’டுக்கு மாற்றப்பட்டனர்

நாளை வாக்குப்பதிவு முடியும் வரை, ‘வயிற்றில் நெருப்பைக் கட்டியது போல’ எம்.எல்.ஏ.க்களை பதற்றத்துடன் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு!

ராஜ்யசபா தேர்தலையொட்டி கர்நாடகாவில் சிறை வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குஜராத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு நாளை வாக்குப்பதிவு முடியும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை (8-ம் தேதி) நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் குஜராத்தில் இருந்து 3 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 57 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கையை தக்க வைத்திருந்தால், காங்கிரஸ் கட்சியால் உறுதியாக ஒரு எம்.பி.யை பெற முடியும். இந்த நம்பிக்கையில் காங்கிரஸ் தலைவி சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேலை இங்கிருந்து மறுபடியும் எம்.பி. ஆக்கும் திட்டத்தில் காங்கிரஸ் இறங்கியது.

ஆனால் ஓரிரு வாரங்களுக்கு முன்பு மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான சங்கர்சிங் வகேலா, காங்கிரஸில் இருந்து விலகினார். அடுத்த அதிர்ச்சியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் ஐக்கியமானார்கள். எனவே காங்கிரஸின் எண்ணிக்கை 51 ஆனது. எஞ்சிய எம்.எல்.ஏ.க்களில் 44 பேரை மட்டு வசப்படுத்திய காங்கிரஸ், அவர்களை ஜூலை 29-ம் தேதி முதல் பெங்களூரு அருகிலுள்ள ‘ரிசார்ட்’டில் தங்கவைத்து பாதுகாத்தது.

மொத்த 182 எம்.எல்.ஏ.க்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் பா.ஜ.க.வால் உறுதியாக 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்த பா.ஜ.க., 3-வது வேட்பாளராக பல்வந்த்சிங் ராஜ்புத்தை களம் இறக்கியது.

மொத்தம் 45 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால், அகமது படேல் ஜெயித்துவிடலாம். தற்போது கைவசம் வைத்திருக்கும் 44 எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. ஆகியோரின் ஆதரவை நம்பியிருக்கிறது. தவிர, பெங்களூருக்கு வராத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 7 பேரில் சிலர் ஆதரித்தாலே வெற்றி நிச்சயம் என நம்புகிறது காங்கிரஸ்!

ஆனால் விவகாரம் என்னவென்றால், ‘ரிசார்ட்’டில் தங்க வைக்கப்பட்ட 44 எம்.எல்.ஏ.க்களும் கடைசி நிமிடம் வரை மனம் மாறாமல் காங்கிரஸுக்கு ஆதரவு கொடுப்பார்களா? என்பதுதான். எனவே அவர்களை தேர்தல் முடியும் வரை பத்திரமாக பாதுகாக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. 9 நாட்கள் பெங்களூரு ரிசார்ட்டில் பாதுகாக்கப்பட்ட அவர்கள், இன்டிகோ விமானம் மூலமாக இன்று (ஆகஸ்ட் 7) அதிகாலை குஜராத் தலைநகர் அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்டனர். விமான நிலையத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் பாரத்சிங் சோலங்கி, காங்கிரஸ் கொறடா சைலேஷ் பார்மர் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கிருந்து எம்.எல்.ஏ.க்களை அனந்த் மாவட்டத்திற்கு உட்பட்ட வன்ஸ்கேடியா என்ற கிராமத்தையொட்டி உள்ள ஒரு ‘ரிசார்ட்’டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள். இந்த மாவட்டம், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சோலங்கியின் சொந்த மாவட்டம்! தவிர, எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ‘ரிசார்ட்’ அமைந்துள்ள கிராமம், அனந்த் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரின் சொந்த கிராமம் ஆகும். மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றாலும்கூட, இந்த கிராமத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு அதிகம். அதனாலேயே இந்த கிராமத்தை தேர்வு செய்து எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே இன்று கர்நாடக முதல்வர் விஜய் ரூபான், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே அகமது படேல் தோல்வி உறுதி’ என கூறியிருப்பது காங்கிரஸுக்கு வயிற்றை கலக்கியிருக்கிறது. நாளை வாக்குப்பதிவு முடியும் வரை, ‘வயிற்றில் நெருப்பைக் கட்டியது போல’ எம்.எல்.ஏ.க்களை பதற்றத்துடன் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close