உ.பி.,யில் ஐந்து நாளில் 60 குழந்தைகள் பலியான கொடூரம்! விசாரணைக்கு உத்தரவு

கோரக்பூர் தொகுதி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியாகும்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

முதலில், இரு நாட்களில் 30 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், 5 நாட்களில் 60 குழந்தைகள் பலியாகி உள்ளனர். கோரக்பூர் பகுதியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கும் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஆக்ஸிஜனுக்கான, கட்டணத் தொகை ரூ. 67 லட்சம் வழங்கப்படாததால் சப்ளை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த மரணம் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியானது.

மாவட்ட கலெக்டர் ராஜீவ் ராவுத்லே இது குறித்து அவர் கூறுகையில், “கோரக்பூர் பிஆர்டி மருத்துவ கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக எந்த மரணமும் நிகழவில்லை. வெவ்வேறு மருத்துவ காரணங்களுக்காக நேற்று மட்டும் தான் 7 பேர் உயிரிழந்தனர்” என்றார்.

கோரக்பூர் தொகுதி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியாகும். இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்ட நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி இந்த மரணங்கள் நடைபெற்று வந்துள்ளது. நேற்று முன் தினம் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். வெவ்வேறு மருத்துவ பிரிவுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த குழந்தைகள், கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் இறந்த விவரம்:

August 7: 9 (4 NICU, 2 AES, 3 non-AES)
August 8: 12 (7 NICU, 3 AES, 2 non-AES)
August 9: 9 (6 NICU, 2 AES, 1 non-AES)
August 10: 23 (14 NICU, 3 AES, 6 non-AES)
August 11: 7 (3 NICU, 2 AES, 2 non-AES)

இதைத் தொடர்ந்து, 60 குழந்தைககளை பலி கொண்ட இந்த கொடூர சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு சார்பில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற காரணம் மறுக்கப்படுகிறது.

குழந்தைகளின் மரணம் துரதிருஷ்டவசமானது என்றும் குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரபிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close