Advertisment

குஜராத் முதல் கட்ட தேர்தல்: 61% வாக்குப் பதிவு.. 2017 தேர்தலை விடக் குறைவு.. என்ன காரணம்?

குஜராத்தில் 89 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2017 தேர்தலை விடக் குறைவு என்றும் பழங்குடியினப் பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
குஜராத் முதல் கட்ட தேர்தல்: 61% வாக்குப் பதிவு.. 2017 தேர்தலை விடக் குறைவு.. என்ன காரணம்?

குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நேற்று (டிசம்பர் 1) வாக்குப்பதிவு நடைபெற்றது. இரவு 10 மணி வரை 61% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய தேர்தல் 2017 தேர்தலில் பதிவான 68 சதவீதத்தைவிட வாக்குப்பதிவு குறைவாகும். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது.

Advertisment

நர்மதா மாவட்டத்தில் உள்ள தேடியாபாடா தொகுதியில் அதிகபட்சமாக (81.37%) வாக்குகள் பதிவாகின. இது பழங்குடியினர் (எஸ்.டி) ஒதுக்கீட்டு தொகுதியாகும். தொழில்மயமான பகுதியான கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாமில் குறைவான வாக்குகள் (39.89%) பதிவாகின. 2017 இல், தேடியாபாடா 85.5% வாக்குகளும், காந்திதாம் 54.54% வாக்குளும் பெற்றிருந்தன.

தாபி மாவட்டத்தில் அதிகபட்சமாக 72.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வியாரா மற்றும் நிசார் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 68.09% வாக்குகளுடன் நர்மதா மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற நான்கு மாவட்டங்களில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளன: நவ்சாரி (65.91%), டாங் (64.84%), வல்சாத் (62.46%) மற்றும் கிர் சோம்நாத் (60.46%).

இது தோராயமான எண்ணிக்கை என்றும், அதிகாரப்பூர்வ எண்ணிக்கை பின்னர் தெரிய வரும் என்றும் குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி பாரதி கூறினார்.

தேடியாபாடாவைத் தவிர, நிசார் (77.87%), ஜகாடியா (77.65%) மற்றும் கப்ரதா (75.17%) போன்ற பழங்குடியின தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

சௌராஷ்டிரா பகுதியில் உள்ள மோர்பி தொகுதியில் 67.16% பேர் வாக்களித்தனர். இங்கு சமீபத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில்135 பேர் உயிரிழந்தனர். 2017 -இல் பதிவான 71.74% வாக்குகளை விட மிகவும் குறைவு. 2017 (74.5%) உடன் ஒப்பிடும்போது, ​​மோர்பி மாவட்டத்தில் உள்ள தங்கரா தொகுதியில் குறைந்த வாக்குப்பதிவு (64.23%) பதிவாகியுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2017இல் இந்த 89 தொகுதியில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 38 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான பாரதிய பழங்குடியினர் கட்சி மற்றும் என்சிபி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தேர்தலை புறக்கணித்த 6 கிராமங்கள்

சௌராஷ்டிரா-கட்ச் பகுதிக்கான பாஜக பொதுச் செயலாளர் வினோத் சாவ்டா கூறுகையில், "மக்கள் போராட்டம் எதுவும் நடக்காததால் இம்முறை குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில், சமூக கிளர்ச்சிகள் நடைபெற்று, மக்கள் உணர்ச்சி பொங்கி வாக்களித்தனர். மக்கள் சூரத்திலிருந்து சௌராஷ்டிராவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அது எங்களுக்கு எதிராக இருந்தது. ஆனால் இம்முறை வாக்குப்பதிவு இயற்கையாக இருந்தது. எங்கள் ஆதரவாளர்கள்

வெளியே வந்து பாஜகவுக்கு வாக்களித்தனர்,'' என்றார்.

பாஜக ஆதரவாளர்கள் தான் வாக்களிக்க வரவில்லை என்று காங்கிரஸ் கூறியது. "பாஜக அரசுக்கு எதிராக 2017-ல் இருந்த கோபம், அதைத் தணிக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை. மாறாக அதிகரித்துவிட்டது. வாக்காளர்களைக் கவரும் வகையில் பாஜக சிறப்பாக எதையும் செய்யவில்லை. எனவே, பாரம்பரிய பாஜக ஆதரவாளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவில்லை, அதே நேரத்தில் பாஜக மீது கோபம் கொண்டவர்கள் வாக்குச் சாவடிகளில் குவிந்து காங்கிரஸுக்கு வாக்களித்தனர்" என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி கூறினார்.

ஜாம்நகர் மாவட்டத்தில் த்ராஃபா, நர்மதா மாவட்டத்தில் சமோட் மற்றும் பருச் மாவட்டத்தில் கேசர் உட்பட 6 கிராமங்கள் தேர்தலை புறக்கணித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

த்ராஃபாவில், ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு தனித்தனி வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். கேசர் கிராமத்தில் வாக்களிக்க தேவையான அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி தேர்தலை புறக்கணித்தனர். 1,625 வாக்குகள் உள்ள சமோட் கிராமத்தில், விவசாய நில ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தக் கோரி தேர்தலை புறக்கணித்தனர் என தேர்தல் ஆணையத் தகவல் கூறுகிறது.

காங்கிரஸ் புகார்

நேற்று வாக்குப்பதிவு தொடங்கியதும், சில வாக்குச்சாவடிகளில் இ.பி.எம் மிஷின் வேலை செய்யவில்லை என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. குறைந்தது 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றும் பாஜகவின் பைட்டுகளைக் காட்டும் மின்னணு சேனல்கள் குறித்தும் புகார் அளித்தது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.

முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல், ஜாம்நகர் (வடக்கு) பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி, மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா ஆகியோர் காலையிலேலே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

ரிவாபா ஜடேஜா ராஜ்கோட்டிலும், அவரது கணவரும் கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜா ஜாம்நகரில் வாக்களித்தனர். இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியில் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment