Advertisment

காணாமல்போன 3 சிறுவர்கள்: ‘ஆதார்’ பயோமெட்ரிக் தகவல்களால் பெற்றோர்களுடன் இணையும் நெகிழ்ச்சி சம்பவம்

ஆதார் தகவல்கள் மூலம் 3 சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் இணைய உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான நடைமுறைகளுக்குப் பின் பெற்றோர்களுடன் இணைவர்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
காணாமல்போன 3 சிறுவர்கள்: ‘ஆதார்’ பயோமெட்ரிக் தகவல்களால் பெற்றோர்களுடன் இணையும் நெகிழ்ச்சி சம்பவம்

'ஆதார்’ எண் பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட பயோமெட்ரிக் தகவல்கள் மூலம் வீட்டிலிருந்து காணாமல் போன 3 சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் விரைவில் இணைய உள்ளனர்.

Advertisment

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதங்களில், வீட்டிலிருந்து காணாமல்போய் சாலைகளில் மூன்று சிறுவர்கள் நிர்க்கதியாக அலைந்து திரிந்தனர். இதையடுத்து அந்த அந்த மூன்று சிறுவர்களும் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுவர்கள் மூன்று பேரும் 14 வயது மற்றும் அதற்கு குறைவாகவே இருக்கும்.

மூன்று சிறுவர்களில் ஒரு சிறுவன் மன வளர்ச்சி குன்றியவன். அதேபோல், மற்ற இரண்டு சிறுவர்கள் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள் என தெரிகிறது. இந்த இரண்டு சிறுவர்களும் தங்கள் பெயர்களை நினைவுகொள்ளும் நிலையில், மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தன் பெயரை நினைவு கொள்ள முடியவில்லை. இதனால், காப்பகத்தில் உள்ள ஒருவர் அந்த சிறுவனுக்கு புதிய பெயரை சூட்டினார்.

இந்நிலையில், அந்த மூன்று சிறுவர்களும் அங்குள்ள ஆதார் எண் பதிவு செய்யும் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அப்போது, 3 சிறுவர்களுக்கும் ஆதார் எண்ணை பதிவு செய்ய முடியவில்லை. சிறுவர்களின் அங்க அடையாளங்கள் மற்றும் விரல் ரேகைகள் உள்ளிட்டவை அடங்கிய பயோமெட்ரிக் தகவல்கள் ஏற்கனவே வேறொரு இடத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது அப்போது தெரியவந்தது.

இதனால், பதிவு செய்யப்பட்ட ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள் உதவியுடன் சிறுவர்களின் தகவல்களை திரட்டி அவர்களை பெற்றோர்களுடன் இணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் களமிறங்கினர். உடனடியாக, அந்த சிறுவர்களின் பெயர்கள் மற்றும் முகவரியைக் கண்டறியும் பணிகளை ஆதார் பதிவு செய்யும் அதிகாரிகள் முன்னெடுத்தனர். இதன்மூலம், அந்த மூன்று சிறுவர்களும் மத்திய பிரதேச மாநிலம் இந்தோர், ஜார்க்கண்ட், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் அந்த சிறுவர்களின் பெற்றோர்களை தொடர்புகொண்டனர். மேலும், சிறுவர்களின் பெற்றோர்களை விரைவில் பெங்களூருவிற்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மூன்று சிறுவர்களும் தங்கள் பெற்றோர்களை அடையாளம் கண்டுபிடித்தால் மட்டுமே அவர்களுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும், இது வழக்கமான நடைமுறைதான் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவர்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைக்க இன்னும் சில நடைமுறைகள் நிறைவேற்றப்பட உள்ளன. சிறுவர்களின் அடையாளங்களை காப்பாற்றுவதற்காக அவர்கள் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆதார் எண்ணால் மக்களின் ரகசியங்கள், அவரது தனிப்பட்ட விவரங்கள் காப்பாற்றப்படாது என பரவலாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இங்கு ஆதார் தகவல்கள் மூலம் 3 சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் இணைய உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Bangalore Jharkhand Indore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment