இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயம் இல்லை: மத்திய அரசு!

இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை...

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான அடையாள அட்டை என ஆரம்பத்தில் கூறப்பட்ட ஆதார் அட்டை, இன்று அவசியமான ஒன்றாக மாறி உள்ளது. சமையல் காஸ், முதியோர் உதவித் தொகை, மண்ணெணெய் உள்ளிட்ட அரசு மானியம் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கு தொடங்கவும், வருமான வரித் தாக்கல் செய்யவும், பான் கார்டு, ரேஷன் அட்டைக்கும் என அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், இறப்பை பதிவு செய்ய அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என நேற்று செய்தி வெளியானது. அந்தச் செய்தியில், “அடையாள மோசடியை தடுப்பதற்காக அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இறப்பை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் தவிர இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநில மக்களுக்கும் இது பொருந்தும். அந்த 3 மாநிலங்களுக்கு தனியாக அறிவிக்கை வெளியிடப்படும். இறப்பை பதிவு செய்யும்போது இறந்தவர்களின் அடையாளத்தை நிரூபிப்பதற்காக ஆதார் எண் அவசியம் ஆகிறது. எனவே அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இறப்பை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இச்செய்தியை மத்திய அரசு இன்று மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறந்தவருக்கு ஆதார் எண் இருந்தால் அந்த எண்ணை உறவினர்கள் இறப்பு சான்றிதழில் பதிவு செய்யலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல அடையாள சான்றுகளை கொடுப்பதற்கு பதில் ஆதார் எண்ணை கொடுக்கலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என அதில் குறிப்பிடவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close