சிம் கார்டு வாங்க இனி ஆதார் தேவையில்லை : மத்திய அரசு அறிவிப்பு

பொதுமக்கள் இனி சிம் கார்டு பெற ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சியமைத்த பின்னர் இந்திய மக்கள் அனைவருக்கும் தங்களின் அடையாளங்கள் கொண்ட ஆதார் அட்டைக் கட்டாயமாக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் மையங்கள் அமைத்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆதார் அட்டைகள் பதிவு நடத்தி வழங்கப்பட்டது.

பின்வரும் நாட்களில் ஆதார் அட்டை அனைத்து விஷயங்களிலும் கட்டாயமாக்கப்பட்டது. மக்கள் அனைவரையும் தங்களின், வங்கி கணக்கு மற்றும் தொலைப்பேசி எண்களில் ஆதார் அட்டையில் உள்ள எண் இணைக்குமாறு வலியுறுத்தியது. இதன் மூலம் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் குறைக்கப்படும் என்று மத்திய அரசு கூறி வந்தது. அப்படி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் அவர்களின் தொலைப்பேசி அழைப்புகள் முதலில் துண்டிக்கப்படும் பின்னர் தடை செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது.

சிம் கார்டு நம்பர்களுடன் ஆதார் எண் இணைப்பதை மக்கள் பலரும் கடுமையாக எதிர்த்து வந்தனர். மத்திய அரசு ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்தக் கட்டாயத்தின் மூலம் மத்திய அரசு தனி மனிதனின் நடவடிக்கையைக் கண்காணிப்பது தவறானது என்றும் தெரிவித்தனர்.

எனவே இந்த கட்டாயத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் பதிவானது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆதார் வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை சிம்கார்டுகள் வாங்க ஆதார் அட்டை கட்டாயமில்லை, அதுவரை மக்களிடம் ஆதார் பற்றி கேட்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஆதார் கார்டு இல்லாத மக்களுக்கு சிம் கார்டுகள் வழங்க நிறுவனங்கள் மறுப்பதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து, இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்திற்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலில், ஆதார் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, பொதுமக்களிடம் சிம் கார்டுகள் விற்கும்போது ஆதார் விவரங்களைக் கேட்க கூடாது என்று கூறியுள்ளது.

சிம் கார்டுகள் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் ஆதாருக்கு பதிலாக, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பிறகு சான்றுகளை அடையாளத்திற்காக பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

×Close
×Close