மகன் திருமணத்தில் பங்கேற்க மதானிக்கு அனுமதி : உச்சநீதிமன்றம்

மதானிக்கு அவரது மகன் திருமணத்தில் பங்கேற்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது மதானி நீதிமன்ற அனுமதியுடன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.

கேரளாவை சேர்ந்த அப்துல் நாசர் மதானிக்கு அவரது மகன் திருமணத்தில் பங்கேற்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டவர் அப்துல் நாசர் மதானி. இவர் கேரளாவில் மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற அமைப்பை நிறுவினார். அந்தக் கட்சிக்கு கேரளாவில் குறிப்பிட்ட பகுதிகளில் செல்வாக்கு உண்டு.

பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் கைதான மதானி, தற்போது நீதிமன்ற அனுமதியுடன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். இந்தச் சூழலில் ஆகஸ்ட் 9-ம் தேதி கேரளாவில் தலசேரி என்ற இடத்தில் மதானியின் மகன் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் பங்கேற்கவும், தனது பெற்றோரை சந்திக்கவும் பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மதானி அனுமதி கேட்டார். அவரது பெற்றோரை சந்திக்க அனுமதி கொடுத்த சிறப்பு நீதிமன்றம், மகன் திருமண விழாவில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மதானி மனுதாக்கல் செய்தார். இன்று மதானியின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அவரை விடுவிக்க உத்தரவிட்டது. மதானி தனது மகன் திருமணத்தில் பங்கேற்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கிறது.

×Close
×Close