சாதி மறுப்பு திருமணம் செய்வதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: உச்சநீதிமன்றம்

இருவேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இருவேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வட இந்தியாவில் சாதி மறுப்பு திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. கட்ட பஞ்சாயத்துகள் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பபவர்களை கொலை செய்வதும், பிரிப்பதும், ஊர் மக்களை வைத்து தாக்குதல் நிகழ்த்துவதும் என பல்வேறு விதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு பெண்ணும் ஆணும் காதலித்து திருமணம் செய்துகொள்வது அவரவர் விருப்பம் எனவும், அதனை கட்ட பஞ்சாயத்துகள் கேள்வி எழுப்பக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் மீது கட்ட பஞ்சாயத்துகள், சமூக அமைப்புகள் மூலம் தாக்குதல் நிகழ்த்துதல் தண்டனைக்குரிய குற்றம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு காதல் திருமணங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தும் கட்ட பஞ்சாயத்துகளை கட்டுப்படுத்த தவறியதற்காக நீதிபதிகள் மத்திய அரசை கடிந்துகொண்டனர். மேலும், இவற்றை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

×Close
×Close