Advertisment

104 வயதில் தேர்வில் வெற்றி! குட்டியம்மாவுக்கு குவியும் வாழ்த்து!

குட்டியம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடம் கணக்கு. தன்னுடைய இளவயதில் காய்கறி விற்கும் கடையை நிர்வகித்து வந்ததால், எண்கள் மற்றும் கணக்கு போடுவது அவருக்கு நன்றாக தெரிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
104 வயதில் தேர்வில் வெற்றி! குட்டியம்மாவுக்கு குவியும் வாழ்த்து!

கேரள அரசாங்கம் கடந்த வாரம் நடத்திய முதல்நிலை எழுத்தறிவு தேர்வில், வெற்றி பெற்ற 104 வயதான குட்டியம்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisment

கேரள அரசு எழுத்தறிவு இயக்க திட்டத்தின் ஒரு பகுதியான ‘மிகவுல்சவம்’ திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட முதல்நிலை எழுத்தறிவு தேர்வில், கோட்டயம் மாவட்டம் அயர்குன்னம் பஞ்சாயத்தைச் சேர்ந்த 104 வயதான குட்டியம்மா, 100க்கு 89 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். குட்டியம்மாவை போன்று இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நான்காம் வகுப்புக்கு இணையான எழுத்தறிவுத் தேர்வில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும்,  இதுபோன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மாநில கல்வித்துறை அமைச்சரான வி சிவன்குட்டி, நூற்றாண்டை கடந்த மூதாட்டி குட்டியம்மாவின் மன உறுதியை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், எழுத்துகள், வார்த்தைகள் மற்றும் அறிவுலகில் நுழைவதற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்பதை குட்டியம்மா நிருபித்து காட்டியுள்ளார். இலக்கை அடையும் மனம் இருந்தால், வயது என்பது வெறும் எண்தான் என அவர் கூறினார்.

நவம்பர் 10-ம் தேதி முடிவுகள் வெளியானதும், அயர்குன்னம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குட்டியம்மாவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் அவரின் சாதனையை பாராட்டி, சிபிஐ(எம்) மற்றும் பாஜக மாவட்டத் தலைவர்களும் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

குட்டியம்மாவுக்கு வாசிப்பு, எழுதுதல் மற்றும் எழுத்தறிவுத் தேர்வின் பிற அம்சங்களில் பயிற்சி அளித்த சக்ஷரதா பிரேரக் ரெஹனா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், குட்டியம்மா கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் நாளிதழை கொஞ்சம் வாசிப்பார். ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி அவருக்கு படிக்கத் தெரியும் என குட்டியம்மாவின் குடும்பத்தினர் என்னிடம் கூறினர். ஆனால் அவருக்கு எழுத்தறிவு இல்லை. அதனால் முதலில் அவருக்கு பெயரையும், முகவரியையும் எழுத கற்றுக் கொடுத்தேன். வேகமாக அதை கற்றுக்கொண்டார். தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக, குட்டியம்மா உட்பட ஆறு மாணவர்களுக்கு பாடம் கற்பித்ததாக ரெஹனா கூறினார்.

குட்டியம்மா மிகவும் சுறுசுறுப்பானவள். நூறு வயதை கடந்தாலும் யாருடைய உதவியும் இல்லாமல் வீட்டுக்குள் நடமாட முடியும். இருப்பினும், காது கேட்கும் திறன் சற்று கடினமாக உள்ளதாகவும், இரவில் கண்பார்வை சற்று மங்கலாக உள்ளதாகவும் ரெஹனா கூறினார்.

குட்டியம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடம் கணக்கு. தன்னுடைய இளவயதில் காய்கறி விற்கும் கடையை நிர்வகித்து வந்ததால், எண்கள் மற்றும் கணக்கு போடுவது அவருக்கு நன்றாக தெரிந்துள்ளது. கணக்கு பாடத்தில் இவர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளார். உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் கேரள மாநிலத்தைப் பற்றி எழுதும்படி கேட்ட பிரிவில் மட்டும் அவரால் அதிக மதிப்பெண் வாங்க முடியவில்லை. அதனால் மிகவும் சோர்வாக இருந்தார். ஆனால் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்காததால் முடிவுகள் வந்ததும் அவர் மகிழ்ச்சியில் திளைத்து விட்டார் என ரெஹனா கூறினார்.

இந்த எழுத்தறிவு தேர்வு கணக்கு, மலையாளம் மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் பங்கேற்பவர்களின் திறனை சோதித்தது.

குட்டியம்மாவின் பேத்தியின் மருமகளான ரெஜின் பிஜூ கூறுகையில், நூற்றாண்டை கடந்த என் பாட்டி, எங்கள் குடும்பத்தின் ஐந்து தலைமுறைகளையும் பார்த்தவர். அவளுடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்களில் மிகவும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் தான். அவர் நீண்ட ஆயுளுடன் இருக்கிறார்.

அவர் கண்டிப்பான உணவு ஒழுங்குமுறையை கடைபிடிப்பார். காலை மற்றும் இரவு வேளை மட்டும்தான் கொஞ்சமாக சாப்பிடுவார். மரவள்ளிக்கிழங்கு மற்றும் மீன் உணவுகள் அவருக்கு பிடிக்கும். பகல் வேளையில் தூங்காமல், ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார். அதனால்தான் வயதானவர்களுக்கு வரும் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற முக்கிய உடல்நல பிரச்சனைகள் ஏதும் அவருக்கு இல்லை என ரெஜினி கூறினார்.

கேரள எழுத்தறிவுத் திட்டம், வாசிப்பு, எழுதுதல் மற்றும் பிற அறிவுத் திறன்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்லமுடியாமல் போனவர்களிடம் இந்த திட்டம் அபார வெற்றியை பெற்றுள்ளது.

சமீப ஆண்டுகளில், இந்தத் திட்டம் நூற்றாண்டை கடந்தவர்கள், பெரும்பாலும் பெண்கள், சமத்துவ தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.

கடந்த ஆண்டு, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பாகிரதி அம்மா, தன்னுடைய 105 வது வயதில், மாநிலத்தின் கல்வியறிவு திட்டத்தில் படித்து, 4 ஆம் வகுப்புக்கு சமமான தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து பெண்கள் முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய பங்களிப்புக்காக, மத்திய அரசு அவருக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜீலை மாதம் தன்னுடைய 107வது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment