ஐ.ஐ.டி.களில். மாணவர் சேர்க்கையை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங் தொடர்பாக விசாரிக்க கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதுSupreme Court

நுழைவுத் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கியது தொடர்பான வழக்கில், இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. நிறுவனத்தில் இந்தாண்டு சேர்க்கைக்காக சமீபத்தில் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில், இந்தி மொழியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில் எழுத்துப்பிழை இருந்ததாக கூறப்பட்டதால், அந்த கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என ஐ.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் வெற்றிபெற்ற 2 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இந்தி மொழி வினாத்தாளில் மட்டுமே கேள்வியில் பிழை இருந்ததாகவும், ஆனால், ஐ.ஐ.டி. நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கருணை மதிப்பெண்கள் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், தங்களால் ஐ.ஐ.டி.-யில் சேர முடியவில்லை என மனுவில் குறிப்பிட்ட மாணவர்கள், தேர்வு முடிவுகளை மறுசீராய்வு செய்ய கோரினர்.

இந்த மனு வெள்ளிக் கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும், ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங் தொடர்பாக கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

மாணவர் சேர்க்கையை நிறுத்திவைக்க உத்தரவிட்டதால், தேர்வில் வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கிலான மாணவர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

×Close
×Close