டார்ஜிலிங்கில் இருந்து துணை ராணுவப் படையினரை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவிற்கு இடைக்கால தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள கூர்கா இனமக்கள் தங்களுக்கு தனிமாநிலம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வாகனங்கங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, பொதுச் சொத்துக்களையும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தில் பல உயிரிழப்பும் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில், கூர்காலாந்து போராட்டக்குழு தலைவரான பிமர் குருங், மேற்கு வங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், உள்துறை ராஜ்நாத் சிங்கை, பிமல் குருங் ஆதவாளர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, கூர்கா மக்களின் அடிப்படைகள் உரிமைகள், போராட்டத்தின் போது மேற்கு வங்க போலீஸார் எடுத்த நடவடிக்கைகள், வழக்குள் போன்றவற்றை திரும்பப் பெறுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்குழு தலைவர் பிம்மல் குருங் அறிவித்தார். கடந்த செப்.,27-ம் தேதி போராட்டம் கைவிடப்பட்டதாக டார்ஜிலிங்கில் அறிவிக்கப்பட்ட நிலையில், 104 நாட்களாக நடந்து வந்த போராட்டம் கலைந்தது.
முன்னதாக, காங்கிரஸ் ஆட்சியின் போது பிமல் குருங் மீது தீவிரவாத தடை சட்டம் போன்றவற்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டார்ஜிலிங் மலைப்பகுதியில் உள்ள அமைப்புகளின் தலைவராக பிமல் குருங்கை அங்கீகரிப்பதாகவும் அறிவித்தார்.
இதனடையே, மேற்கு வங்க மாநில சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொல்லப்பட்டார். காவல்துறையினருக்கும், பிமல் குருங் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டார். சப்-இன்ஸ்பெக்டரின் உயிரிழப்பிற்கு பிமல் குருங் ஆதரவாளர்கள் தான் காரணம் என குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், டார்ஜிலிங் பகுதிக்கு அனுப்பட்டிருந்த 15 துணை ராணுவப் படையினரை திரும்பப் பெற மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டது. முதற்கட்டமாக (அக்.,16-ம் தேதி) முதல் 10 படைகளையும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள படைகளை வரும் 20-ம் தேதியும் திரும்பப்பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
ஆனால், இயல்பு நிலை திருமபும் வரை டார்ஜிங்கில் இருந்து துணை ராணுவப் படையினரை திரும்பப் பெற கூடாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார். எனினும், டார்ஜிகில் இருந்து 7 துணை ராணுவப் படைகள் அக்.,16-ம் தேதி திரும்பெறப்பட்டன.
இந்த நிலையில், மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் துணை ராணுவப் படை திரும்பப்பெறப்பட்டது குறித்து மேற்கு வங்க அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரணை செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், டார்ஜிலிங்கில் இருந்து துணை ராணுவப் படையினரை திரும்பப் பெறுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு அக்டோபர் 23-ம் தேதிக்குள் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், இதற்கான பதிலை மாநில அரசு 26-ம் தேதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.