Advertisment

பாஜக அணியில் அதிமுக இல்லையா? அமைச்சர் பதவி மறுக்கப்பட்ட முழுப் பின்னணி

இப்போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு என்பதை பாஜக முன்கூட்டியே உறுதி செய்திருந்தது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Narendra Modi Cabinet, AIADMK Union Ministers, OP Ravindranath Kumar, நரேந்திர மோடி

Narendra Modi Cabinet, AIADMK Union Ministers, OP Ravindranath Kumar, நரேந்திர மோடி

நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கடைசி நிமிடம் வரை நம்பியிருந்தார்கள் அதிமுக முன்னணியினர். ஆனால் அந்தப் பேச்சையே எடுக்காமல், அதிமுக.வை கழற்றி விட்டிருக்கிறது பாரதிய ஜனதா. இதன் பின்னணி இங்கே...

Advertisment

பாரதிய ஜனதாக் கட்சி மத்தியில் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 2014-ம் ஆண்டு தனிப் பெரும்பான்மை கிடைத்தபோதும், அப்போதைய கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தே ஆட்சி அமைத்தார் மோடி. இப்போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு என்பதை பாஜக முன்கூட்டியே உறுதி செய்திருந்தது.

நரேந்திர மோடிக்கு கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாகவே மெஜாரிட்டி கொடுத்திருக்கிறார்கள் இந்திய வாக்காளர்கள். ஆனால் இந்த முறை ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் அமைச்சரவையில் ஒரு இடம் என்கிற நிலைப்பாடை பாஜக எடுத்தது. அந்த அடிப்படையில் பஸ்வான், அத்வாலே மற்றும் சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பிடித்தார்கள்.

நிதிஷ்குமார் தனது கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதில் அதிருப்தி அடைந்து, பதவியே தேவையில்லை என கூறிவிட்டார். இதில் அதிமுக நிலைமைதான் பரிதாபம். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் குறித்து அனைத்துக் கூட்டணித் தலைவர்களுடனும் நேற்று (மே 30) பேசிய பாஜக மேலிடம், அதிமுக தலைமையிடம் உரையாடியதாக தகவல் இல்லை.

அதிமுக.வைப் பொறுத்தவரை, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனும், மக்களவைத் தேர்தலில் வென்ற ஒரே அதிமுக எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி பெற காய் நகர்த்தியதாக தெரிகிறது.

OP Ravindranath Kumar Union Minister, ரவீந்திரநாத் குமார், மத்திய அமைச்சர் பதவி, PM Narendra Modi Cabinet ஓ.பி.ரவீந்திரநாத் குமார்

அமைச்சரவை பதவியேற்கும் தினமான நேற்று காலையிலும்கூட அமைச்சர் ஜெயகுமார், ‘பாஜக அழைத்தால், அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து பரிசீலிப்போம்’ என கூறினார். ஆனால் அப்படியொரு அழைப்பே இல்லாமல் போனதுதான் பரிதாபம்!

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்கள் இதை ஏற்கனவே எதிர்பார்த்திருக்கலாம். காரணம், இரு தினங்களுக்கு முன்பே அதிமுக மீது பாஜக.வுக்கு 5 அதிருப்திகள்  இருப்பதையும், அதனால் அமைச்சர் பதவி வழங்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தோம். கிட்டத்தட்ட அதே காரணங்களையொட்டியே அதிமுக.வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான முழுப் பின்னணி வருமாறு:

1. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததாக அதிமுக ஒருபோதும் அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து அமித்ஷா பேசினார். ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரில் பிரசாரக் கூட்டங்களை நடத்துங்கள் என அமித்ஷா கேட்டுக்கொண்டார். அது தொடர்பான வீடியோ பதிவுகள் அப்போது வைரல் ஆகின.

ஆனாலும் அதிமுக பிரசாரக் கூட்டங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்கிற வாசகத்தை பயன்படுத்தவே இல்லை. இதை தங்களுக்கான அவமதிப்பாக அப்போதே பார்த்தது பாஜக. எனினும் தேர்தல் நேரம் என்பதால் காட்டிக்கொள்ளவில்லை. இப்போது, ‘எங்கள் கூட்டணியில் இணையாத அதிமுக.வுக்கு எதற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும்’ என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது பாஜக.

2. அதிமுக அரசை தக்க வைக்க இடைத்தேர்தல்களில் அக்கறை காட்டிய அதிமுக, மக்களவைத் தேர்தலில் கோட்டை விட்டதாக பாஜக நினைக்கிறது. குறிப்பாக அதிமுக செல்வாக்கான கோவையிலும்கூட பாஜக வெற்றி பெறாததை, திட்டமிட்டு அதிமுக கவிழ்த்ததாக கருதுகிறது பாஜக.

3. தேர்தலுக்கு முன்பு அமித்ஷா சென்னைக்கு வந்து அதிமுக தலைவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அமித்ஷா வருவதாக இருந்த தினத்திற்கு முன்தினம் அவசரமாக பாமக.வை அழைத்து ‘7 மக்களவைத் தொகுதி, ஒரு ராஜ்யசபா தொகுதி’ என கூட்டணி ஒப்பந்தம் போட்டது அதிமுக.

இதைத் தொடர்ந்து அமித்ஷா தனது சென்னை பயணத்தை ரத்து செய்தார். பின்னர் பாமக.வுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததை காரணம் காட்டியே பாஜக.வுக்கும், தேமுதிக.வுக்கும் தொகுதிகளை அதிகம் வழங்க மறுத்து பேரம் பேசியது அதிமுக. இதுவும் பாஜக மேலிட கோபத்திற்கு முக்கியக் காரணம்.

4. இதே அணியில் தமிழகத்தில் இன்னொரு தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்கிற முடிவுக்கும் பாஜக வந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு உறுதியாக வருவேன் என கூறியிருக்கும் ரஜினிதான் பாஜக.வின் சாய்ஸ்.

ரஜினியின் கனவுத் திட்டமான நதி நீர் இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்துவிட்டு, அவருடன் கூட்டணியில் இணைய வசதியாகவே அதிமுக.வை கழற்றி விட்டிருப்பதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

5. அதிமுக அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார்கள் இருக்கின்றன. மத்திய அமைச்சரவையில் அவர்களை இணைப்பது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என பாஜக நினைப்பதுவும் ஒரு காரணம்.

இதெல்லாம் போக, தேர்தலுக்கு முன்பு அதிமுக தரப்பிலிருந்து முக்கியமான தலைவர் ஒருவர், தமிழகத்தை சேர்ந்த பவர்ஃபுல் காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாஜக மேலிடத்திற்கு தகவல் சென்றதாக தெரிகிறது. இந்தக் காரணங்கள்தான் அதிமுக.வை கழற்றிவிடக் காரணம்.

Read More: ரவிந்திரநாத் குமார் சஸ்பென்ஸ்: ‘எல்லாமே அம்மாவின் ஆசி; பொறுத்திருங்கள்’

1998-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்கு ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்று, அதிர வைத்தார். அதன்பிறகு 20 ஆண்டுகள் கழித்து அதே பாஜ கட்சியின் ஆட்சியில் இடம் பெறும் ஆவலில் இருந்த அதிமுக.வை இந்த முறை பாஜக உதறித் தள்ளியிருக்கிறது. இதன் விளைவுகள் தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து புதிய தாக்கங்களை உருவாக்கக்கூடும்.

 

Narendra Modi Aiadmk O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment