Advertisment

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூன் 5 வரை நீதிமன்றம் தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
p chidambaram on corona virus, indian economy, ப.சிதம்பரம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூன் 5 வரை இடைக்கால தடை விதித்து டெல்லி பாட்டியாலா தனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Advertisment

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தப் பிரச்னையில் வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற கார்த்தி சிதம்பரம் சட்ட விரோதமாக உதவி செய்ததாக கடந்த 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் முறையே சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆகியன வழக்குப் பதிவு செய்தன. கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கு தொடர்பாக நிலைத் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். ஜூலை 10-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து ஏற்கனவே டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

கார்த்தியின் தந்தையும் அப்போதைய மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மீதும் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கேட்டு ப.சிதம்பரம் சார்பில் டெல்லி பாட்டியாலா தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக்மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள். ப.சிதம்பரத்தின் நேர்மையான செயல்பாடு, சமூகத்தில் அவருக்கு உள்ள மரியாதை ஆகியவற்றை சுட்டிக்காட்டி, நடவடிக்கைகளில் இருந்து அவருக்கு நிவாரணம் வேண்டி அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில், ‘இந்த விவகாரம் தொடர்பான அனைத்தும் இயல்பாகவே ஆவணங்களாக இருக்கின்றன. தற்போதைய அரசு வசமே அவை இருக்கின்றன. என்னிடம் இருந்து கைப்பற்ற எதுவும் இல்லை.’ என குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு தரப்பு கருத்தையும் தனி நீதிபதி ஓ.பி.சைனி கேட்டார். அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் நிதீஷ் ராணா வாதிடுகையில், ‘மே 30-ம் தேதி (கடந்த ஆண்டு)யும், பிறகு ஜூன் 5-ம் தேதியும் அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியும் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகவில்லை’ என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, வழக்கு விசாரணையின் அடுத்த தேதியான ஜூன் 5 வரை இது தொடர்பாக எந்த மேல் நடவடிக்கையும் ப.சிதம்பரம் மீது எடுக்க வேண்டாம் என நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம் அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு அழைத்தால், ப.சிதம்பரம் செல்ல வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

 

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment