போலீசாரை அவதூறாக பேசினால் நாக்கை வெட்டுவேன்! - இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

நான் உங்களுடைய வீட்டுக்கு வரட்டுமா? அல்லது போலீஸ் நிலையம் வரட்டுமா?

தமிழகத்தில் காவல்துறையை சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. மற்றொருவர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.வுமான கருணாஸ்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தின் தடையையும் மீறி ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விநாயகர் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று கூறி காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், “போலீஸோட ஈரல் 100 சதவிகிதம் அழுகிப் போச்சு. நான் இங்க இருக்குற இந்து வீடு வழியா போறேன். முடிஞ்சா தடுத்து பாரு. கிறிஸ்துவர், முஸ்லிம், பாதிரியார் கைக் கூலி நீங்கதான். போலீசுக்கு வெட்கமா இல்லை. பயங்கரவாதிக்கு துணை போறீங்க நீங்க. வெட்கமாக இல்லை… நான் கொடுக்குறேன் லஞ்சம்” என்று பேசினார்.

அடுத்த ஓரிரு நாட்களில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டத்தில் பேசிய கருணாஸ், “யூனிஃபார்மை கழட்டி வைத்துவிட்டு வா.. ஒத்தைக்கு ஒத்தை பார்த்துவிடலாம். எங்க ஆளுங்க கைய, கால ஒடச்சா, உன் கை, கால உடைப்பேன்” என்றார். கருணாஸ் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை சொல்லவில்லை என்றாலும், தனிப்பட்ட பகைக்காக, பொதுவெளியில் ஒரு காவல்துறை அதிகாரியை ஒருமையிலும், அநாகரீகமான வார்த்தையிலும் வசை பாடியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

தமிழகத்தில் இப்படி நிலைமைப் போய்க்கொண்டிருக்க, காரமான ஆந்திராவில், ஆளுங்கட்சியின் எம்.பி. ஒருவர் போலீசை விமர்சித்ததற்காக, அந்த எம்.பி.யின் நாக்கை வெட்டுவேன் என போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யும், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவருமான ஜி.சி.திவாகர் ரெட்டியின் சொந்த ஊர் தாதிபத்ரி நகரமாகும். கடந்த சில நாட்களுக்கு முன் தாதிபத்ரி அருகே ஒரு கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் நீண்டநேரத்துக்குப்பின் போலீஸார் குவிக்கப்பட்டபின் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து எம்.பி. ஜே.சி. திவாகர் ரெட்டி கடந்த இரு நாட்களாக போலீஸாரை கடுமையாக விமர்சித்து வந்தார். ‘என்னுடைய சொந்த ஊருக்கு அருகே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடக்கிறது. ஆனால், போலீஸார் அந்த மோதலைக் கட்டுப்படுத்தாமல், திருநங்கைகள் போல் இருந்தார்கள். கலவரத்தைப் பார்த்து போலீஸார் பயந்து ஓடிவிட்டார்கள், நான் கூட ஓடிவிட்டேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து இருந்தார். தொடர்ந்து போலீஸாருக்கு கண்டனத்தையும், கடினமான வார்த்தைகளையும் பிரயோகம் செய்துவந்தார்.

இந்நிலையில், எம்.பி. திவாகர் ரெட்டியின் விமர்சனத்தைப் பொறுக்க முடியாத ஆனந்தபுரா மாவட்டம், கதிரி நகர இன்ஸ்பெக்டர் மாதவ், நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த போது, “எம்.பி. திவாகர் ரெட்டி பேசியதற்கும், மற்ற எம்.பி., எம்எல்ஏக்கள் எங்கள் விமர்சித்ததற்கும் நாங்கள் எதிர்வினையாற்றாமல் பொறுமையாக இருக்கிறோம். ஆனால் இனிமேல் எம்பி, எம்எல்ஏக்கள் பேசினால் பொறுமையாக இருக்க மாட்டோம். நாக்கை அறுத்துவிடுவோம். இனிமேல் போலீஸாருக்கு எதிராகப் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். போலீஸாரின் ஒழுக்கத்தைப் பற்றி பேசும் யோசித்து பேசுங்கள். நாங்கள் இந்த போலீஸ் வேலைக்கு வரும் போதுஆண்களாகத்தான் வந்திருக்கிறோம். திருநங்கைகளாக வரவில்லை” என்று எச்சரித்து இருக்கிறார்.

ஆனால், இதில் பயங்கர டென்ஷனான எம்.பி. திவாகர் ரெட்டி, இன்ஸ்பெக்டர் மாதவுக்கு துணிச்சல் இருந்தால், அவர் இருக்கும் இடத்தைக் கூறட்டும்.. நான் செல்கிறேன், என் நாக்கை அறுக்கட்டும். நான் உங்களுடைய வீட்டுக்கு வரட்டுமா அல்லது போலீஸ் நிலையம் வரட்டுமா? அல்லது நீங்கள் பிறந்த இடமான அனந்தபுரம் கிராமத்துக்கு வரட்டுமா?. எங்கு வரச் சொல்கிறீர்கள். உங்களுடைய காக்கி சீருடையைக் கழற்றிவிட்டு வாருங்கள், நானும் சாதாரண ஆடையில் வருகிறேன் என்று சவால் விடுத்திருக்கிறார்.

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close