Advertisment

அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரியா நீங்கள்? அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி

அயோத்தி ராமர் கோவில் திறப்பு தேதியை அறிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நீங்கள் என்ன தலைமை பூசாரியா (மஹந்த்) என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வியெழுப்பி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Ram Temple opening date

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஜனவரி 1, 2024-ல் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்த மறுநாள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெள்ளிக்கிழமை கோவிலை திறப்பதற்கான அவரது தகுதிச்சான்றுகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே அமித் ஷாவின் வேலை, ஆனால் அவர் கோவிலை பற்றி பேசுகிறார் என்று கார்கே கூறினார். பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஹரியானாவில் உள்ள பானிபட்டில் நடைபெற்ற பேரணியில் பேசிய கார்கே, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக அளித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

Advertisment

மேலும், “திரிபுராவில் தேர்தல் நடக்கிறது. (அமித்) ஷா அங்கு சென்று ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதாகவும், அதன் திறப்பு விழா (ஜனவரி) 1ஆம் தேதி என்றும் கூறியுள்ளார். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் அதை ஏன் அறிவிக்கிறீர்கள்? என்று கார்கே கேள்வி எழுப்பினார்.

மேலும், “நீங்கள் ராமர் கோயிலின் தலைமை பூசாரியா. இல்லை நீங்கள் ராமர் கோயிலின் மகான்னா? மகான்கள், சாதுக்கள் மற்றும் சன்னியாசிகள் அதைப் பற்றி பேசட்டும். கோவில் திறப்பு பற்றி பேச நீங்கள் யார்?

நீங்கள் ஒரு அரசியல்வாதி. நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதும், மக்களுக்கு உணவை உறுதி செய்வதும், விவசாயிகளுக்குப் போதிய விலையை வழங்குவதும் உங்கள் பணியாகும்” என்றார்.

தொடர்ந்து, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு உறுதியளித்ததாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் கார்கே கூறினார். அப்போது, "அவர்கள் (பாஜக)  குறைந்தப்பட்ச ஆதார விலையை அதிகரிப்பது பற்றி பேசினார்கள். ஆனால் அது நடந்ததா?” என்றார்.

இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மேலும் கூறுகையில், “அவர்கள் (பாஜக) கத்தியுடன் திரிகிறார்கள், சமூகத்தை பிளவுபடுத்துகிறார்கள், சாதிகள் மற்றும் மதங்களை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கிறார்கள்.

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை அந்த பிளவைக் குறைக்கும் நோக்கத்தில் உள்ளது என்று கார்கே கூறினார். “இது வாக்குகளுக்காக அல்ல. இது தேச நலன், இது உங்கள் நலன், இது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தலித்துகளின் நலன்,'' என்றார்.

மார்ச் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள திரிபுராவின் சப்ரூமில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ஷா வியாழன் அன்று கோயில் விவகாரம் தொடர்பாக காங்கிரஸையும் ராகுலையும் விமர்சித்தார், மேலும் அதன் கட்டுமானத்தை விரைவுபடுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார்.

முன்னதாக, தேர்தல் பரப்பரையின்போது அமித் ஷா, “பாபர் அதை அழித்து விட்டு, நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, இந்த காங்கிரஸார் வழக்குகளை நீதிமன்றங்களில் சிக்க வைத்தனர்.

செஷன்ஸ் கோர்ட், பிறகு உயர் நீதிமன்றம், பிறகு உச்ச நீதிமன்றம், மீண்டும் செஷன்ஸ் கோர்ட்டுக்கு என வழக்கு மாற மாற சிக்க வைக்கப்பட்டது. இந்த நிலையில், மோடிஜி வந்த பின்னர் ஒரு நாள் காலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தது.

ராம் லல்லாவின் கோவிலுக்கு மோடிஜி பூமிபூஜை செய்தார், மேலும் கட்டுமானப் பணிகள் தொடங்கின”என்றார்.

மேலும், ஜனவரி 1, 2024 அன்று கோயில் திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Amit Shah Mallikarjuna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment