காஷ்மீரில் அரங்கேறிய சோகம்: ஒன்பது வயது சிறுமி, ராணுவ வீரர் பலி!

கடந்த ஜுலை 10-ஆம் தேதி, அமர்நாத் யாத்திரை சென்று விட்டு ஜம்முவுக்கு பேருந்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்த குஜராத் மாநில யாத்ரீகர்களின் பேருந்து மீது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள் ஏழு பேர் உள்பட மொத்தம் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரின் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் எம்எல்ஏ அஜாஸ் அகமது மிர் என்பவரது ஓட்டுனரும், காவலருமான தௌசீஃப் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இயக்க தீவிரவாதி அபு இஸ்மாயிலை கைது செய்யும் பொருட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று (திங்கள்) ஜம்மு காஷ்மீரின் பிம்பர் கலி பகுதியில், பாகிஸ்தான் மீண்டும்  அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பூன்ச் பாலகோட் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமியும், ஒரு ராணுவ வீரரும் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் காயம் அடைந்திருக்கிறார். பாகிஸ்தானின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலால் ஒரு சிறுமி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

×Close
×Close