Advertisment

பஞ்சாபை தொடர்ந்து குஜராத்தை குறி வைக்கிறது ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் முதல் முறையாக அரசியல் புரட்சி செய்தது. அது தற்போது பஞ்சாபிலும் நிகழ்ந்துள்ளது. குஜராத்திலும் அது நிகழும்.

author-image
WebDesk
New Update
பஞ்சாபை தொடர்ந்து குஜராத்தை குறி வைக்கிறது ஆம் ஆத்மி

பஞ்சாபில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

Advertisment

டெல்லியைத் தொடர்ந்து நாட்டில் இரண்டாவதாக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது ஆம் ஆத்மி.

தற்போது அக்கட்சி குஜராத்தை குறிவைத்துள்ளது. குஜராத்தை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ளது. குஜராத்தில் முதல்வராக இருந்துதான் பிரதமராக மோடி ஆகியுள்ளார்.

அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தான் இருக்கிறது. 5 மாநிலத் தேர்தலில் படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்திருப்பதாலும், தொடர்ந்து காங்கிரஸ் தோல்வியைத் தழுவி வருவதாலும் இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வர ஆம் ஆத்மி துடிக்கிறது.

மார்ச் 19ஆம் தேதி முதல் திரங்கா யாத்திரை என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த பிரசாரத்துக்கு டில்லியில் இருந்தும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வரவுள்ளனர்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜரிவால், பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள பகவந்த் மன் ஆகியோரும் குஜராத்தில் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாநிலத்துக்கு வருகைத் தரவுள்ளனர்.

குஜராத்தை அடுத்த இலக்ககாக ஆம் ஆத்மி கொண்டுள்ளதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சூரத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 27 இடங்களில் வென்றது ஆம் ஆத்மி. இது அக்கட்சி குஜராத்தில் வேரூன்ற நம்பிக்கையை அளித்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

சூரத் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியபோதிலும் ஆம் ஆத்மி அடுத்த இடத்தை பிடித்தது. டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் குஜராத்துக்கு அவ்வப்போது வருகை தந்த வண்ணம் உள்ளார்.

2021இல் காந்திநகர் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி ஓரிடத்தில் மட்டுமே வென்றது. எனினும், மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் பல இடங்களில் தோற்றது. ஆம் ஆத்மியால் வாக்குகள் சிதறியதால் காங்கிரஸ் தோற்றது.

மொத்தமுள்ள 44 இடங்களில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வென்றது. அதே மாநகராட்சியில் 2015இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 16 இடங்களை கைப்பற்றி இருந்தது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மீதும் படிதார் சமூகத்தினர் அதிருப்தி அடைந்ததாலேயே ஆத் ஆத்மி காந்திநகர் மாநகராட்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெற முடிந்தது.

2016 சூரத் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 116 வார்டுகளில் காங்கிரஸ் 36இல் வென்றது. அவற்றில் 26 இடங்கள் படிதார் சமூகத்தினரின் செல்வாக்கு பெற்ற வார்டுகளாக இருந்தன. கல்வி மற்றும் வேலையில் இடஒதுக்கீடு கோரி அவர்கள் போராட்டம் நடத்தி இருந்த சமயம் அது. படிதார் வழக்கமாக பாஜகவினரை மட்டுமே ஆதரித்து வருவர். ஆனால், அந்தத் தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தனர்.

படிதார் சமூகத்தினரின் இளைஞர் அமைப்பினர் மீது குற்ற வழக்குகளை ஆளும் பாஜக பதிவு செய்ததை அடுத்து, அவர்கள் அக்கட்சிக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர்.

பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த படிதார் சமூகத்தைச் சேர்ந்தவரான கோபால் இதாலியாவை கட்சியின் மாநிலத் தலைவராக ஆம் ஆத்மி நியமித்தது. படிதார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது அதில் கோபால் தீவிரமாகச் செயல்பாட்டார். இவ்வாறாக படிதார் சமூகத்தினரின் ஆதரவை ஆம் ஆத்மி பெற்றது.

குஜராத்தில் உள்ள வாக்காளர்களில் படிதார் சமூகத்தினரின் வாக்குகள் மட்டும் 19 சதவீதமாக உள்ளது. மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 71 இல் படிதார் சமூகத்தினர் வாக்குகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆம் ஆத்மிக்கு படிதார் இளைஞர் அமைப்பு எதிர்ப்பு

இந்தச் சூழ்நிலையில், ஆம் ஆத்மியை ஆதரிக்க மாட்டோம் என்று படிதார் இளைஞர் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் தார்மிக் மாளவியா கூறுகையில், படிதார் இளைஞர் அமைப்பினரால் மட்டுமே சூரத் நகராட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஆம் ஆத்மி பெற்றது என்பதை கோபால் இதாலியா அறிவார்.

ஆனால், அவர் பொதுக் கூட்டங்களில் பேசும்போது ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் முக்கியத் தலைவர்களின் கடின உழைப்பால் இந்த வெற்றியைப் பெற்றோம் என்று கூறிவருகிறார்.

எனவே, இனி ஆம் ஆத்மி கட்சிக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம். அரவிந்த் கெஜரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருக்கும் படிதார் இளைஞர்கள் ஆதரவால் தான் தங்கள் கட்சிக்கு வெற்றி பெற்றது என்று தெரியும். பாஜக வெற்றி பெறக் கூடாது என்பதால் தான் நாங்கள் ஆம் ஆத்மியை ஆதரித்தோம் என்று கூறினார்.

சூரத் மாநகராட்சித் தேர்தலுக்கு பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் கொறடா பாவனா சோலங்கி உள்பட 6 பேர் பாஜகவில் இணைந்தனர். படிதார் இடஒதுக்கீட்டு போராட்டத்தை முன்னெடுத்த ஹார்திக் படேல், குஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக உள்ளார்.

2015 ஆம் ஆண்டில் படிதார் சமூகத்தினரின் போராட்டம் நடைபெற்றபோது சூரத் நகரிலும் வன்முறை வெடித்தது. 2017 பேரவைத் தேர்தலில் படிதார் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களான அம்ரேலியில் காங்கிரஸும், சூரத்தில் பாஜகவும் வென்றது. மொத்தம் 99 இடங்களில் பாஜகவும், 77 இடங்களில் காங்கிரஸும் வெற்றி பெற்றது. 29 இடங்களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி அனைத்து இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்தது.

ஆம் ஆத்மி சவால் அளிக்குமா என்ற கேள்விக்கு குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டில் விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

பஞ்சாபில் காங்கிரஸுக்குள் உள்கட்சி பூசல் நடப்பதால் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. குஜராத் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். பிரதமர் மோடியை அவர்கள் எப்போதும் ஆதரித்து வருகிறார்கள். எதிர்வரும் தேர்தலில் எங்களக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது என்று பாட்டில் தெரிவித்தார்.

உ.பி: 2019 மக்களவை தேர்தலில் வென்ற தொகுதிகளை 2022-லும் தக்கவைத்த பாஜக

குஜராத் ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் யோகேஷ் ஜத்வானி கூறுகையில், இதுவரை 6,000 உறுப்பினர்களையும், பல்வேறு நகர்ப்புற ஊரக அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 64 உறுப்பினர்களையும் ஆம் ஆத்மி கொண்டுள்ளது என்றார்.

'ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் முதல் முறையாக அரசியல் புரட்சி செய்தது. அது தற்போது பஞ்சாபிலும் நிகழ்ந்துள்ளது. குஜராத்திலும் அது நிகழும். பஞ்சாபில் வெற்றி பெற உழைத்தவர்கள் குஜராத்திலும் வெற்றி பெற தேவையான யூகங்களை உருவாக்குவார்கள்' என்கிறார் ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் கோபால் இதாலியா.

குஜராத் பேரவைத் தேர்தலில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment