பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் சம்பளத்தில் 15% பிடித்தம் : அசாம் அரசு புது சட்டம்

பெற்றோரை பாதுகாக்க அரசு ஊழியர்கள் மறுத்தால் அவர்களது சம்பளத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் மாநில அரசு சட்டமியற்றியுள்ளது.

பெற்றோர்களை பாதுகாக்கும் பொருட்டு அசாம் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதன்படி, தங்களது பெற்றோரை பாதுகாக்க அரசு ஊழியர்கள் மறுத்தால் அவர்களது சம்பளத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

தங்களை விட்டால் தமது குழந்தையை கவனிக்க வேறு யாரும் இல்லை என்று நினைத்து தங்களுடைய பாசத்தை முழுமையாக காட்டி வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் நமது பெற்றோர்கள். சிறுவயதிலிருந்து நம்மை பராமரிப்பதில் தான் அவர்களுடைய அதிகமாக காலம் கழிந்து இருக்கும். ஆனால் அவர்கள் முதிய வயதை அடைந்து சிரமப்படும் போது அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டிய நாம், அவர்களை சரி வர பேணிக் காப்பதில்லை. இன்னும் சில பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் இணைத்து விடுகிறார்கள்.

இந்த போக்கை மாற்றும் பொருட்டு அசாம் மாநில சட்டப்பேரவையில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என்பது தான் அந்த சட்டம்.

வயதான பெற்றோர்கள், மாற்றுத் திறனாளி சகோதரர், சகோதரி இருந்தால் அவர்களை பாதுகாக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையின் மூலம் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகை செய்யபட்டுள்ளது. இந்த புதிய சட்டம் அரசு ஊழியர்களிடம் முதற்கட்டமாக அமல்படுத்தப்படும் எனவும், பின்னர் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. அதன் முதல்வராக சோனோவால் உள்ளார். “பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை கட்டுப்படுத்தும் சட்டம் உட்பட, பல நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, அசாம் அரசு அண்மையில் தெரிவித்தது. அந்த வகையில் தற்போதைய சட்டமும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close