பெங்களூரூவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனுக்கு கடந்த ஜூன் 2016-ஆம் ஆண்டு, அவனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு 'Friend Request' வந்துள்ளது. 21 வயதான தேஜல் படேல் எனும் பெயரில் அந்த Request வந்திருக்கிறது. அச்சிறுவனும், அதனை ஏற்றுக் கொண்டு, அந்த நபருடன் பெற்றோருக்கு தெரியாமல் சாட்டிங் செய்து வந்திருக்கிறான்.
இந்நிலையில், சில ஆபாச பதிவுகளை அச்சிறுவனுக்கு படேல் அனுப்பியுள்ளான். அதற்கு பின், அச்சிறுவனின் நிர்வாண படங்களை தனக்கு அனுப்புமாறு கேட்டிருக்கிறான். இச்சிறுவனும் அதனை அனுப்பியுள்ளான். ஒருகட்டத்தில், அச்சிறுவனுடைய பெற்றோர்களின் நிர்வாணப் படங்களை அனுப்புமாறு கேட்டிருக்கிறான்.
இதையடுத்து அந்த சிறுவன், தனது ஸ்மார்ட்போன் மூலம், பெற்றோர்களுக்கே தெரியாமல் அவர்களது நிர்வாணப் படங்களை படமெடுத்து, அவற்றினை படேலுக்கு அனுப்பியுள்ளான். இதை பயன்படுத்திக் கொண்ட படேல், அச்சிறுவனிடம் 'உனது பெற்றோர்களின் நிர்வாண படங்களை ஆபாச தளங்களில் பதிவேற்றிவிடுவேன்' என மிரட்டியிருக்கிறான். அதன்பின், சிறுவனின் பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு, படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க 1 கோடி ரூபாய் தர வேண்டும் என எச்சரித்திருக்கிறான்.
இதையடுத்து, கடந்த மே 20-ஆம் தேதி, காவல் நிலையத்தில் இதுகுறித்து அந்த பெற்றோர்கள் புகார் அளித்திருக்கின்றனர். குற்றவாளியின் மீது, 67 பி மின்னணு வடிவத்தில் குழந்தைகளின் பாலியல் வெளிப்படையான தகவலை வெளியிடுதல் அல்லது பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் சிறுவர்களைப் பாதுகாத்தல் எனும் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.