பந்த் ஹைலைட்ஸ்: எதிர்க்கட்சிகள் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

Tamil News Today Live, Ramnath Kovind
Tamil News Today Live, Ramnath Kovind

Bharat Bandh Updates: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இன்று சந்திக்கின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தவுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத்பவார் ஆகியோர் அடங்கிய குழு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக, ஐந்து பேருக்கு மட்டும் இந்தச் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும் இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

விவசாய திருத்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இன்று நாடு முழுவதும் பந்த் நடக்கிறது. அது குறித்த உடனுக்குடனான தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 


16:27 (IST)09 Dec 2020

பொது போக்குவரத்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்த தடை – உயர் நீதிமன்றம்

பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவியை பொருத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

15:38 (IST)09 Dec 2020

விசாரணைக் குழு அமைத்ததில் ஆளுநருக்கு விருப்பமில்லை – சூரப்பா தரப்பு பதில்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார்கள் எழுந்ததையடுத்து, தமிழக அரசு விசாணை ஆணையம் அமைத்தது. இந்த நிலையில், சூரப்பா மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் புகழேந்தி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. சூரப்பா தரப்பில், இந்த வழக்கில் தன்னை இணைக்க கோரி மனு தாக்கல் செய்ததை உயர் நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்துள்ளது. மேலும், சூரப்பா தரப்பில், தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்ததில் வேந்தருக்கு (ஆளுநர்) விருப்பமில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15:27 (IST)09 Dec 2020

பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு டிசம்பர் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக அறிவித்துள்ளது. இந்த செய்முறை தேர்வுகள் 3 மணி நேரம் ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14:57 (IST)09 Dec 2020

நான் விவசாயி என்பதால் வேளாண் சட்டத்தை ஆதரிக்கிறேன் – முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி, “தமிழக விவசாயிகள் வேளாண் சட்டத்தால் பாதிக்கப்படமாட்டார்கள். நான் விவசாயி என்பதால் வேளாண் சட்டத்தை ஆதரிக்கிறேன். தமிழக நலனை தவிர்த்து பிற மாநிலங்களைப் பற்றி சிந்திக்க கூடியவர் ஸ்டாலின். ” என்று தெரிவித்துள்ளார்.

14:45 (IST)09 Dec 2020

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்: தந்தை புகார்

சின்னத்திரை நடிகை சித்ரா சந்தேக மரணம் குறித்து உரிய விசாரனை நடத்தக் கோரி சென்னை நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் சித்ராவின் தந்தை புகார் அளித்துள்ளார்.

14:03 (IST)09 Dec 2020

ரஜினிக்கு பதவி வெறி தூங்கவிடாமல் செய்வதால் கட்சி ஆரம்பிக்க திட்டம் – அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “2ஜி பற்றி ஆ.ராசா விவாதிக்க விரும்பினால் நான் அதற்கான ஏற்பாட்டை செய்யத் தயாராக இருக்கிறேன். ரஜினிக்கு உள்ள பதவி வெறி தூங்கவிடாமல் செய்வதால் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

13:55 (IST)09 Dec 2020

2ஜி பற்றி பேசுவதை முதல்வர் நிறுத்த வேண்டும் – திமுக எம்.பி ஆ.ராசா

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “நான் தனி ஆளாக வந்து எது 2ஜி வழக்கு, எது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு உச்ச நீதிமன்ற வழக்கு தீர்ப்பு எது என்று உங்களுக்கு விளக்குவதற்காக சவால் விடுத்திருந்தேன். இன்று வரை அந்த சவாலுக்கு முதல்வரிடம் இருந்து முறையான அதிகாரப்பூர்வமான எந்த பதிலும் வரவில்லை. என்னை அழைக்கவும் இல்லை. சிபிஐ 14 நாள் விசாரித்த பிறகு இந்து ஜோடிக்கப்பட்ட வழக்கு முடிக்கப்பட்ட என் வழக்கு எங்கே? உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீது பல்வேறு கணைகளைத் தொடுத்து இது போல் எதிர்காலத்தில் வரக்கூடாது என்றும் சமூகத்தில் இதுபோன்றவர்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது. விவாதத்தில் தகுதி இல்லாதவர்களுடன் நான் விவாதிக்கத் தயாராக இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

13:31 (IST)09 Dec 2020

திமுக எம்.பி ஆ.ராசா மீது அமைச்சர் செல்லூர் ராஜு புகார்

திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் பழனிசாமி தன்னுடன் கோட்டையில் விவாதிக்கத் தயாரா? என்று கேட்ட நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு திமுக எம்.பி ஆ.ராசாவை கடுமையாக விமர்சித்துள்ளார். செல்லூர் ராஜு, “தமிழரின் மானம் மரியாதையைக் கெடுத்தவர் ஆ.ராசா; திகார் சிறை வா வா என்ரு அழைப்பதால் ஆ.ராசா அச்சத்தில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

12:56 (IST)09 Dec 2020

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா சந்தித்துள்ளார். சூரப்பா மீதான முறைகேடு புகார் தொடர்பாக தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கங்களை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

12:50 (IST)09 Dec 2020

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ வழக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

21:15 (IST)08 Dec 2020

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங் வாழ்த்து

பாரத் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த விவசாயிகளுக்கும், மாநில மக்களுக்கும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங் வாழ்த்து தெரிவித்தார்.    

19:12 (IST)08 Dec 2020

பெருமாள் முருகன், வயலின் இசைக் கலைஞர் டி.கிருஷ்ணன் ஆதரவு

பெருமாள் முருகன், வயலின் இசைக் கலைஞர் டி.கிருஷ்ணன்  விவாயிகளுக்கு ஆதரவாக  காணொளி காட்சியை வெளியிட்டனர்.   

19:08 (IST)08 Dec 2020

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ராகுல் காந்தி, சரத் பவார் ஆகியோரை கொண்ட ஐவர் குழு ஜனாதிபதியை சந்திக்க் உள்ளது. 

19:04 (IST)08 Dec 2020

இடது சாரிகள் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்காள மாநிலத்தில் இடது சாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  

19:00 (IST)08 Dec 2020

அமித் ஷா பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு 7 மணிக்கு முக்கிய  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

18:58 (IST)08 Dec 2020

பிரகாஷ் ஜவடேக்கர் குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே விவசாயிகளிடையே குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியுள்ளார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது வேளாண் ஒப்பந்தாரர் சட்டத்தை செயல்படுத்தியதாகவும், இதில் இந்த கட்சிகள் இரட்டைவேடம் போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

15:51 (IST)08 Dec 2020

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மறியல்

மதுரை கிழக்கு ஒத்தக்கடையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவாக. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல செயலாளர் அழகர், சக்திவேல், கதிரேசன் மற்றும் அனைத்து அணியினரும் கலந்து கொண்டனர்.விவசாயம் காப்பாற்ற பட வேண்டும் என்று கோஷமிட்டனர்.

15:46 (IST)08 Dec 2020

கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மறியல்; 176 பேர் கைது

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பாரத் பந்த் நடந்து வருகிறது. கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிஐடியூ மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை கரூர் நகரக் காவல் துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலையில் 38, குளித்தலையில் 25, மாயனூர் 13 என 4 இடங்களில் நடந்த மறியலில் 176 பேர் கைது செய்யப்பட்டனர்.

15:24 (IST)08 Dec 2020

விவசாயிகளின் போராட்டத்துக்கு கவிஞர் வைரமுத்து ஆதரவு

கவிஞர் வைரமுத்து விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன; அதை நீளவிடக்கூடாது. இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும் மனம் திறக்க வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

14:56 (IST)08 Dec 2020

வட சென்னையில் டி.கே.ரங்கராஜன் தலைமையில் சிபிஎம் போராட்டம்

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெறும் விவசாயிகளின் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வடசென்னையில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்
தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிபிஎம் கட்சியினர், திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

14:53 (IST)08 Dec 2020

வட சென்னையில் அனைத்துக் கட்சி போராட்டம்

வேளாண் விரோதச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெறும் விவசாயிகளின் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வடசென்னையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன.

14:46 (IST)08 Dec 2020

தமிழகத்தில் ‘பாரத் பந்த்’ தோல்வி – பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தமிழகத்தில் ‘பாரத் பந்த்’ தோல்வியடைந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மோடி விவசாயிகளின் நண்பன் என்ற இயக்கம் இன்று முதல் துவங்கப்பட உள்ளது. பாஜகவினர் கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளை சந்தித்து மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

14:38 (IST)08 Dec 2020

மன்னார்குடியில் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா தலைமையில் மறியல் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளால் அறிவிக்கப்பட்ட பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்தும் மன்னார் குடியில் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா தலைமையில் திமுக கூட்ட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

14:25 (IST)08 Dec 2020

பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து; பலியானவரின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

திருச்சியில் தனியார் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த செல்வகுமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கள் தெரிவித்த முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

14:09 (IST)08 Dec 2020

முசிறியில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேர் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாகத் திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சுரேஷ், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் நரேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களில் 58 பேரை முசிறி போலீசார் கைது செய்து முசிறி தா.பேட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

13:49 (IST)08 Dec 2020

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாய சங்கங்கள் நடத்தும் பாரத்பந்திற்கு ஆதரவாகப் புதுச்சேரியின் தெருக்களில் விவசாய சங்கங்கள் அணிவகுத்து நிற்கின்றன. புதுச்சேரி முதல்வர் வி நாராயணசாமியும் இதில் கலந்துகொண்டார்.

13:48 (IST)08 Dec 2020

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாய சங்கங்கள் நடத்தும் பாரத்பந்திற்கு ஆதரவாகப் புதுச்சேரியின் தெருக்களில் விவசாய சங்கங்கள் அணிவகுத்து நிற்கின்றன. புதுச்சேரி முதல்வர் வி நாராயணசாமியும் இதில் கலந்துகொண்டார்.

13:06 (IST)08 Dec 2020

விவசாயிகளுக்கு ஆதரவாக சைதாப்பேட்டையில் சி.பி.எம் கட்சியினர் போராட்டம்

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று சைதாப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் சி.பி.எம் கட்சியினர்.

12:08 (IST)08 Dec 2020

வீட்டு சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்?

டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 13 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். மேலும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவும் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது.

10:26 (IST)08 Dec 2020

மண்டிகள் மூடல்

எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப்பின் அனைத்து தானிய சந்தைகளும் – 152 பிரதான யார்டுகள், தொகுதி மற்றும் கிராம மட்டத்தில் சுமார் 1,700 துணை யார்டுகள் மற்றும் மண்டிகள் டிசம்பர் 9 (புதன்கிழமை) வரை மூன்று நாட்கள் மூடப்படும். ஏனெனில் இந்த மண்டிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் டெல்லி எல்லையில் உள்ள தர்ணாவில் இணைகிறார்கள்.

09:42 (IST)08 Dec 2020

இடதுசாரிகள் ரயில் மறியல்

விவசாயிகள் அழைத்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது ஜாதவ்பூர் ரயில் நிலையத்தில் இடதுசாரிகளால் ரயில் நிறுத்தப்பட்டது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் பார்த்தா பால்)

09:30 (IST)08 Dec 2020

பாட்னாவில் பாதுகாப்பு பணி தீவிரம்

பாரத் பந்தை ஒட்டி பாட்னாவில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

09:28 (IST)08 Dec 2020

சிங்கு எல்லையில் கடும் பாதுகாப்பு

பாரத் பந்திற்கு சிங்கு எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

09:19 (IST)08 Dec 2020

குஜராத்தில் உற்பத்தி சந்தைகள் மூடல்

செவ்வாயன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அழைக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக குஜராத்தில் சில விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சி) மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமல்சாத் ஏபிஎம்சியின் கீழ் வரும் அமல்சாத் சிக்கூ கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் செயலாளர் ஆஷித் மேத்தா, “சப்போட்டா சீசன் நவம்பர் முதல் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும். விவசாயிகளின் தேசிய வேலைநிறுத்தம் காரணமாக, சப்போட்டா  சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்களுக்கு எங்கள் விநியோகத்தை நாங்கள் தொடர்ந்து செய்துள்ளோம். டெல்லிக்குச் செல்லும் பொருட்களுக்கான விநியோகத்தை டிரான்ஸ்போர்ட்டர்கள் நிறுத்திவிட்டதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எனவே டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு மண்டியை மூடி வைக்க முடிவு செய்துள்ளோம்” என்றார். 

09:00 (IST)08 Dec 2020

மும்பை உற்பத்தி சந்தைக் குழு மூடல்

மும்பை வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் (ஏபிஎம்சி) சந்தைகள் செவ்வாய்க்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண்மை மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் பாரத் பந்த், பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளால் அறிவிக்கப்பட்டது. நவி மும்பையில் அமைந்துள்ள மொத்த சந்தையான மும்பை ஏபிஎம்சி-யின் குழு திங்களன்று மகாராஷ்டிரா மாநில சந்தைக் குழுவிலிருந்து, மாநிலம் முழுவதும் உள்ள ஏபிஎம்சி-களுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்தது. மாநிலம் முழுவதும் உள்ள ஏபிஎம்சியின் அனைத்து மொத்த சந்தைகளும் மூடப்படும் என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

08:52 (IST)08 Dec 2020

அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஆதரவு

3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்த பாரத் பந்த்துக்கு அகமதாபாத் ஆட்டோரிக்ஷா டிரைவர்ஸ் யூனியன் தனது ஆதரவை வழங்கியுள்ளது. அகமதாபாத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் டிசம்பர் 8-ம் தேதியான இன்று ஓடாது என, திங்களன்று ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் அறிவித்தனர்.

08:47 (IST)08 Dec 2020

கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபடும் 300 விவசாய சங்கங்கள்

கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாரத் பந்தில் இணைந்துள்ளனர். சுமார் 300 விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று கர்நாடக ராஜ்ய ரியாதா சங்கத் தலைவர் கே.சந்திரசேகர் தெரிவித்தார். விவசாயி, தொழிலாளர் மற்றும் தலித் குழுக்களின் கூட்டணியான ஐக்யா ஹோராட்டா திங்களன்று காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கியது. பல உழவர் அமைப்புகளின் கூட்டணியான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) செவ்வாய்க்கிழமை ஆறு மணி நேர பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

08:44 (IST)08 Dec 2020

மகாராஷ்டிரா நிலவரம்

மகாராஷ்டிராவில், ஆளும் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் விவசாயிகளுக்கு ஆதரவாக “அரசியல் சாராத” பந்தில் பங்கேற்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்தினார். மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக், சமூக விலகல் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் என்.சி.பி தொழிலாளர்கள் பணிநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றார். 

08:41 (IST)08 Dec 2020

டெல்லி போராட்டம்

டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்ட குழந்தை. 

08:31 (IST)08 Dec 2020

புதுச்சேரியில் முழு ஆதரவு

விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தையொட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

08:22 (IST)08 Dec 2020

விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடக்கிறது.  திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் சுமார் 2 ஆயிரம் கடைகளை மூடி விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். 

பாரத் பந்த்துக்கு தொ.மு.ச. உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு அளிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பணிக்கு வரமாட்டார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபடுவார்கள். அதேவேளை போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் ஏற்படகூடாது என்பதில் போக்குவரத்து கழகம் உறுதியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22 ஆயிரம் மாநகர பஸ்கள், அரசு விரைவு பஸ்கள், நகர பஸ்கள் என அனைத்து பஸ்களும் இன்று வழக்கம்போலவே இயங்கும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharath banth live bharat bandh in india farmers protest

Next Story
இன்று பாரத் பந்த்: 16 எதிர்க்கட்சிகள் ஆதரவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com