குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: பாரத ரத்னா விருதை ஏற்குமா பூபன் ஹசாரிகா குடும்பம்?

அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு, அவர் ஏன் மசோதா குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்?

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்தே தந்தைக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை ஏற்க முடியும் என்று மறைந்த பிரபல இசைக்கலைஞர் பூபன் ஹசாரிகாவின் மகன் தேஜ் ஹசாரிகா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், கவிஞர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. பூபன் ஹசாரிகா 2011ம் ஆண்டு தனது 93 வயதில் காலமாகிவிட்ட நிலையில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு அசாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் பூபன் ஹசாரிகாவுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை ஏற்பது குறித்து அவருடைய மகன் தேஜ் ஹசாரிகா அமெரிக்காவில் இருந்து கடிதம் எழுதியுள்ளார். அதில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பொறுத்துதான் விருதை தாம் ஏற்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”மக்களுக்கு வலியைத் தரக்கூடிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றவே, என் தந்தையின் பெயரையும், வார்த்தைகளையும் செயல்படுத்தி, புகழ்பாடுகிறார்கள் என நம்புகிறேன். இது அவரின் நிலைப்பாட்டைத் தவறாகச் சித்தரிப்பதாகும்.

என் தந்தைக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை ஏற்பேனா அல்லது மறுப்பேனா என்று கேள்வி கேட்கிறார்கள். எனக்கு இதுவரை எனக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. ஆதலால், புறக்கணிக்க ஏதும் இல்லை. அதேசமயம், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எவ்வாறு மத்திய அரசு அணுகும் என்பதைப் பொறுத்தே பாரத ரத்னா விருதை நான் ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை முடிவு செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தேஜ் ஹசாரிகாவின் இந்த கருத்துகளுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பதில் அளித்துள்ள அசாம் மாநில முதல்வரின் ஊடக ஆலோசகர் ரிஷிகேஷ் கோஸ்வாமி, “அவருடையே குடும்பம் ஏற்கனவே இந்த விருதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு, வெளிப்படையாக வரவேற்றுள்ளனர். பாரத ரத்னா விருதை புறக்கணிப்பது மூலம், தேஜ் ஹசாரிகா, அவரது தந்தை இந்த விருதுக்கு தகுதியானவர் இல்லை என்று சொல்ல வருகிறாரா? அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு, அவர் ஏன் மசோதா குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்?” என்றார்.

தேஜின் கருத்துகளை மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஹசாரிகா குடும்பத்தில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close