12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மக்களவையில் மசோதா தாக்கல்

அதிகபட்சமாக வாழ்நாள் சிறை அல்லது தூக்கு தண்டனை விதிக்கலாம்

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கும், கிரிமினல் திருத்தச் சட்டம் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமியின் பாலியல் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேபோல், சமீபத்தில் சென்னை அயனாவரம் பகுதியில் 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை கடந்த ஏப்ரல் 21ம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

அந்த அவசரச்சட்டத்துக்கு மாற்றாகத் திருத்த மசோதாவை மக்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “16 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்த சம்பவமும், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவமும் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் மனசாட்சியை உலுக்கிவிட்டது.

இதையடுத்து, 16 வயதுக்குட்பட்ட மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளைப் பலாத்காரம் மற்றும் கூட்டுப்பலாத்காரம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் தேவைப்பட்டது. நாட்டில் சிறுமிகளுக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் வன்முறைகளும், காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களும் இந்தச் சட்டத்தின் தேவையை அதிகரித்துள்ளன.

இதுபோன்ற கொடிய குற்றங்களில் ஈட்டுபவர்களைத் தண்டிக்கக் கடுமையான சட்டமும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்தில் மக்களிடத்தில் வலுத்தது. இதன்படி 12, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம், கூட்டுப்பலாத்காரம் செய்பவர்களை கடுமையாகத் தண்டிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம். பெண்களைப் பலாத்காரம் செய்தால் விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறை தண்டனையாகவும் விதிக்கப்படும்.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறையாகவும் மாற்றப்படும்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்குக் குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை அல்லது தூக்கு தண்டனை விதிக்கலாம். 12வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கலாம். 16வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் அல்லது கூட்டுப்பலாத்காரம் செய்ததாக எழும் குற்றச்சாட்டின் கீழ் எவருக்கும் முன்ஜாமின் வழங்கப்படாது.

இந்த மசோதாவில் சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக வழக்குகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து, நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதேபோல மேல்முறையீட்டுக்கு வழக்கு சென்றால், அதிகபட்சமாக 6 மாதங்களில் வழக்குகள் நடத்தி முடிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

முன்னதாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, 2வது மாநிலமாக ராஜஸ்தான் அரசும் இதேபோல் கடந்த மார்ச் மாதம் புதிய சட்டத்தை இயற்றியது.

இதைத் தொடர்ந்து, 7 மாத பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது வாலிபருக்கு, ராஜஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close