Advertisment

கொல்கத்தாவில் பாஜக- போலீஸ் மோதல்.. என்ன நடந்தது?

பேரணி தொடர்பாக தேவையில்லாமல் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ கூடாது என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
BJP protest in West Bengal

கொல்கத்தாவில் எம்ஜி சாலையில் எரிக்கப்பட்ட போலீஸ் வாகனம். (Express photo)

மேற்கு வங்காளத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸூக்கு எதிராக கொல்கத்தாவில் பாஜக நடத்திய எதிர்ப்பு ஊர்வலம், நகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறையாக மாறியதால், பல பாஜக தொண்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

Advertisment

மோதல்களைத் தொடர்ந்து, கட்சியின் “நபன்னா அபியான்” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஹவுராவில் உள்ள மாநிலச் செயலகத்துக்கு நடந்த அணிவகுப்பில், பாஜக ஆதரவாளர்களை கலந்து கொள்ள விடாமல் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில உள்துறைச் செயலாளரை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும், பேரணி தொடர்பாக தேவையில்லாமல் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ கூடாது என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் மீனா தேவி புரோகித், ஆண் போலீஸ் அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டதாக ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம், கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் ஏழு நாட்களுக்குள் விளக்கம் கேட்டது. அது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியது.

publive-image

கொல்கத்தாவில் ஹவுரா பாலம் அருகே பாஜக ஆதரவாளர்களை கலைக்கும் பாதுகாப்புப் படையினர். (Express photo by Partha Paul)

பாஜக செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், மோதலின் போது கட்சியின் 363 தொண்டர்கள் காயமடைந்துள்ளனர், மேலும் 35 தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

கொல்கத்தா காவல்துறை இணை ஆணையர் (குற்றம்), முரளிதர் சர்மா, வன்முறை தொடர்பாக 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இரண்டு அதிகாரிகள் உட்பட 27 போலீசார் காயமடைந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தவர்களை அடையாளம் கண்டு வருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,' என்றார்.

முன்னதாக செவ்வாய்கிழமை, குறைந்தது மூன்று போராட்ட பேரணிகள் செயலகத்தை அடையாமல் தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். இதனால், போராட்டக்காரர்கள் கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும், போலீஸ் கியோஸ்க்கை சேதப்படுத்தினர்.

இதனால் நூற்றுக்கணக்கான கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை, தண்ணீர் பீரங்கி மற்றும் லத்தி சார்ஜ் ஆகியவற்றை கையிலெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், இது முன்னரே அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் குறைந்தது 1.5 லட்சம் பாஜகவினர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்றார்.

publive-image

செவ்வாய்க்கிழமை ஹவுரா பாலம் அருகே பாஜக அணிவகுப்பின் போது கற்களை வீசும் பாஜக ஆதரவாளர்கள். (Express Photo by Partha Paul)

மக்களவை எம்பி லாக்கெட் சட்டர்ஜி மற்றும் முன்னாள் மாநில பிரிவு தலைவர் ராகுல் சின்ஹா ​​மற்றும் பிற பாஜக தலைவர்கள், பிற்பகல் 12.30 மணியளவில் இரண்டாவது ஹூக்ளி பாலத்தின் அருகே ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே,பாஜக தொண்டர்களின் இந்த மூர்க்கத்தனமான நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறியது.

கடந்த ஆண்டு மாநிலத் தேர்தல்களில் கட்சியின் தீர்க்கமான தோல்விக்குப் பிறகு, பாஜக தனது தொண்டர்களை புத்துயிர் பெறச் செய்ய, "நபன்னா அபியான்" பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. திரிணாமுல் காங்கிரஸின் ஊழல் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் உயர்மட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கையை இலக்காகக் கொண்டு இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வளாகங்களில் இருந்து ரூ. 40 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை மீட்டுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் (ED) கூறியதையடுத்து, ஜூலை மாதம் அனைத்து அரசு மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்துக்கான பாஜக உந்துதல் அதிகரித்தது.

செவ்வாயன்று, ஹவுராவில் உள்ள சந்த்ராகாச்சி ரயில் நிலையம், ஹவுரா மைதானம், மகாத்மா காந்தி சாலை, ரவீந்திர சரணி மற்றும் லால்பஜாரில் உள்ள போலீஸ் தலைமையகத்திற்கு செல்லும் பகுதிகள் "போர் மண்டலங்களை ஒத்திருந்தன" என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

லால்பஜாரில் உள்ள கொல்கத்தா காவல்துறை தலைமையகத்தில் இருந்து பேஸ்புக் லைவ்வில் பேசிய சுவேந்து அதிகாரி, நானும், லாக்கெட் சாட்டர்ஜியும், ராகுல் சின்ஹாவும் குற்றவாளிகளைப் போல கைது செய்யப்பட்டோம்.  காவலர்கள் எங்களைத் தள்ளி தாக்கினர்... எங்களைக் கைது செய்வதால் எங்கள் அணிவகுப்பை நிறுத்த முடியாது... 2024க்குள் இந்த மாநில அரசை கவிழ்ப்போம் என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ், பாஜகவை கடுமையாக சாடினார். பாஜகவிடம் எந்த வியூகமும் இல்லை. காவல்துறை மற்றும் ஊடகங்கள் தான் நீங்கள் பார்க்கும் கூட்டம். சுவேந்து அதிகாரி தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் ஏன் தர்ணாவில் அமரவில்லை? அவர் அமைதியாக போலீஸ் வேனில் ஏறிச் செல்ல முடிவு செய்தார்,' என்றார்.

சந்த்ராகாச்சியில் இருந்து மாநிலச் செயலகம் செல்லும் பாதையில் போலீஸ் தடுப்புகள், வன்முறை மோதல்களைத் தூண்டின. ஹவுரா நகர போலீஸ் கியோஸ்க், போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது, அவர்கள் சர்வீஸ் சாலைகள் மற்றும் சந்த்ராகாச்சி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள நிலத்திற்குச் சென்று தொடர்ந்து கற்களை வீசினர்.

கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு மாலைக்குள் நிலைமை கட்டுக்குள் வரும் வரை முற்றுகை ஆறு மணி நேரம் தொடர்ந்தது.

இதற்கிடையில், மேலும் இரண்டு பேரணிகள் - ஒன்று சுகந்தோ மஜூம்தர் தலைமையில் ஹவுரா மைதானத்தில் இருந்தும், பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் தலைமையிலான காலேஜ் தெருவில் இருந்தும் ஒன்று - போலீஸ் தடுப்புகளால் தடுக்கப்பட்டது, இது மோதலுக்கு வழிவகுத்தது.

ஹவுராவிலும், மகாத்மா காந்தி சாலையிலும், நிலைமையைக் கட்டுப்படுத்த தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்திய போலீசாருடன் பாஜகவினர் மோதினர். மற்றொரு பாஜக தொண்டர்கள் குழு லால்பஜார் முன் திரண்டனர், அங்கு போலீசார் தடியடி நடத்தினர்.

எங்கள் பேரணியில் மூத்த குடிமக்களைக் கூட போலீஸார் குறிவைத்தனர். எங்கள் தொழிலாளர்களை அடித்தனர். பலர் காயமடைந்துள்ளனர் என்று கைது செய்வதற்கு முன் மஜூம்தர் கூறினார்.

நாங்கள் அமைதியாக இருந்தோம். போலீசார் தடியடி நடத்தினர், தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். எங்கள் மீதும் கற்களை வீசினர். நாங்கள் சண்டையிடுவதற்காக இங்கு வரவில்லை என்று கோஷ் கூறினார்.

மகாத்மா காந்தி சாலையில் இருந்து திரும்பிய பாஜகவினர் போலீசார் மீது கற்களை வீசியதாக, மற்றொரு மோதல் வெடித்தது, இது லத்தி சார்ஜ்க்கு வழிவகுத்தது.

போலீஸ் நடவடிக்கையில் கட்சியின் மூத்த தலைவர் மீனா தேவி புரோகித் காயமடைந்ததாக பாஜகவினர் தெரிவித்தனர். இந்த நிலையிலேயே போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

டி.எம்.சி ட்விட்டரில், “அரசு சொத்துக்களை அழித்தல் மற்றும் சேதப்படுத்துதல், காவல்துறை அதிகாரிகளைத் தாக்குதல், குழப்பத்தை ஏற்படுத்துதல் மற்றும் மாநிலம் முழுவதும் அமைதியை சீர்குலைத்தல் - பாஜகவின் இன்றைய செயல்பாடுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. இத்தகைய மூர்க்கத்தனமான நடத்தையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று பதிவிட்டது.

இதற்கிடையே, பாஜக’ தனது தொண்டர் ஒருவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு படத்தை ட்விட்டரில் வெளியிட்டது மற்றும் காவல் படைகளை டிஎம்சி-இன் "அடிமைகள்" என்று விவரித்தது. “ஊழல்காரர்களான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை இப்படி அறைய அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? போலீஸ் இப்போது ஊழல் அரசியல் கட்சியின் கேடராக உள்ளது” என்று பாஜக பதிவிட்டுள்ளது. “ஊழல்காரர்களான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை இப்படி அறைய அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? போலீஸ் இப்போது ஊழல் அரசியல் கட்சியின் கேடராக உள்ளது” என்று பாஜக பதிவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp West Bengal Tmc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment