பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசி வந்துள்ளார். இரண்டாவது நாள் பயணமாக வாரணாசியில் உள்ள ஷகன்ஷக்பூர் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கழிவறை கட்டுவதற்கான அடிக்கலை பிரதமர் மோடி இன்று நாட்டினார். அவருடன் உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.
அதைத்தொடர்ந்து, மோடி விலங்குகள் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் பிரதமர் உரையாற்றினார். அவர் பேசியதாவது, “விலங்குகள் மருத்துவ முகாமை நடத்திய உத்தரப்பிரதேச அரசிற்கும், முதல்வர் யோகி ஆதித்யாவிற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். விலங்குகளின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியதாகும். இதனால் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் அதிக நன்மைகள் பெறுவர். அரசின் முக்கிய நோக்கம் நாட்டிற்கு சேவை செய்வதாகும். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது மட்டுமல்ல. 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை நமது சுதந்திரப் போராட்ட தியாகிகள் விரும்பிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் பயன்படுத்த வேண்டும்.
இதேபோன்று, பால் மற்றும் கூட்டுறவு துறையில் முன்னேற்றங்கள் கொண்டுவருவது நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். மேலும், அரசின் மண் பரிசோதனை அடையாள அட்டை விவசாயிகளுக்கு கூடுதல் நன்மை தருவதாக இருக்கும்.
எங்களைப் பொருத்தவரை வாக்குகளை பெறுவதற்காகவோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ ஆட்சி நடத்தவில்லை. நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கிறோம். கட்சியை விட நாடே நமக்கு முக்கியம்.
நம் நாட்டை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமையாகும். தூய்மையான இந்தியா ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுக்கும். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கழிவறை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அடிக்கல் நாட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
2022 க்குள், ஒவ்வொரு ஏழைக்கும், நகர்ப்புற அல்லது கிராமப்புறப் பகுதிகளில் ஒரு வீடு கிடைக்கும். கோடிக்கணக்கான வீடுகள் கட்டும் வேலைகள் மற்றும் வருவாய் உருவாக்கப்படும். இதுபோன்ற கடினமான பணியை மோடி எடுக்காவிட்டால் வேறு யாரும் எடுக்க மாட்டார்கள்” என்றார்.