பிப்ரவரி 18 அன்று, உ.பி.,யில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பிரச்சார கூட்டத்தில், புல்டோசர்களை பழுதுப்பார்க்க அனுப்பியுள்ளேன். அவர்கள் மார்ச் 10க்கு பிறகு வேலைக்கு வந்துவிடுவார்கள். அப்போது, ஆக்ரோஷ்யமாக இருக்கும் அனைவரும், அமைசி ஆவார்கள் என்றார்.
தேர்தலில் வெற்றிப்பெற்று பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு, உ.பி.,யில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அவர் சொன்னப்படியே, புல்டோசர்களுக்கு பணிக்கு திரும்பியுள்ளன.
குண்டர்கள் என பதிவுகளில் குறிப்பிடப்பட்டவர்களின் வீடுகளைக் குறிவைக்க புல்டோசர்களைப் பயன்படுத்தியது உள்பட அவரது முதல் பதவி காலத்தில் மிகப்பெரிய போலீஸ் பலத்தை உபயோகித்த யோகியின் அனைத்து செயல்பாடுகளையும் குறிப்பிட்ட எதிர்கட்சிகள், அவரை இம்முறை புல்டோசர் பாபா என அழைத்தனர்.
அவர் பதவியேற்று இரண்டு வாரங்களே ஆகியுள்ள நிலையில், இரண்டு குற்றவாளியின் வீட்டுக்கு புல்டோசர் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு பேரும், பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர்கள். அவர்களை சரணடையுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை மதியம், திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் அமீர்(19), ஆசிப்(22) வீட்டுக்கு புல்டோசர்களை அனுப்பினர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மார்ச் 25 அன்று புகாரளித்தார்.
மேலும், சகோதரர்களின் தந்தை ஷராபத் (56), பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் 48 மணி நேரத்திற்குள் சரணடையாவிட்டால், வீட்டை இடித்துவிடுவோம் என காவல் துறையினர் மிரட்டியுள்ளனர். வீடியோ ஆதாரத்தின்படி, வீட்டின் வெளியே முதல் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளின் மூன்று படிகளை புல்டோசர் இடித்துத் தள்ளுவதை, காவல் துறையினர் பார்த்துக்கொண்டிருப்பதை காண முடிகிறது. குற்றவாளிகளுக்கு உதவக் கூடாது என அக்கம்பக்கத்தினரையும் போலீசார் எச்சரித்தனர்.
ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி கூறுகையில், செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்த குற்றவாளிகளுக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். நீங்கள் தலைமறைவாகவே இருந்துவந்தால், தக்க நடவடிக்கை எடுப்போம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு யாரேனும் உதவி செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம். குற்றவாளிகள் 48 மணி நேரத்திற்குள் சரணடையவில்லை என்றால், மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு வந்தோம் என்றார்.
ஆனால், காவல் துறையின் குற்றச்சாட்டுகளை சகோதரர்களின் தந்தை மறுத்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் சரணடையாவிட்டால் எங்கள் வீட்டை இடித்துத் தள்ளுவோம் என்று போலீசார் அழுத்தம் கொடுத்து மிரட்டுகிறார்கள் என்றார்.
இது குறித்து சஹாரன்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமாரை தொடர்புகொண்டு கேட்கையில், ” பாதிக்கப்பட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய குற்றவாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களை கைது செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். பல்வேறு சோதனை நடத்தி வருகிறோம். பாதிக்கப்பட்டவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அச்சிறுமியில் மைனர் ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்ட முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார். பின்னர், வெள்ளிக்கிழமை இரவு, இரண்டு சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர்.
புல்டோசரைப் பயன்படுத்துவது குறித்து கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “புல்டோசரை தவறாக பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கடந்த வாரம், பிரதாப்கர் மாவட்டத்தில், மார்ச் 19 அன்று பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்கில், ரயில் நிலையத்தின் கழிவறைக்குள் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது இளைஞனைக் கைது செய்திட புல்டோசரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட பம் மோடன்வால் கண்டுபிடிக்க முடியாததால், ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே புல்டோசரை காவல் துறையினர் நிறுத்தியுள்ளனர். உடனடியாக, குற்றவாளி குறித்து தகவல் கிடைத்ததன்பேரில், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், புல்டோசரை பயன்படுத்தி குற்றவாளி குடும்பத்தை மிரட்டியதாக சொல்லும் குற்றச்சாட்டை காவல் துறையினர் மறுத்தனர்.
2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில காவல்துறையால் புல்டோசர் பயன்படுத்தும் முறை தொடர்கிறது. உத்தரப் பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் காவல் துறையினர் சுமார் 15,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான பல சொத்துக்களை கைப்பற்றியதாகவும், சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை இடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
மாவட்ட நிர்வாகத்தின் விசாரணைக்கு பின், கட்டிடங்கள் இடிக்கப்படுவது வழக்கம் என்றும், கட்டுமானத்திற்கு தேவையான அனுமதி பெறப்படவில்லை எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புல்டோசர் டார்கெட்டில், அரசியல்வாதிகளாக மாறிய குண்டர்களான முக்தார் அன்சாரி, அதிக் அகமது, முன்னாள் பிஎஸ்பி எம்பி தாவூத் அகமது, தலைமறைவான கிரிமினல் பதன் சிங் படூ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்கவுன்டரில் கொல்லப்பட்ட விகாஸ் துபே ஆகியோரின் கட்டிடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil