வங்கிக் கடன் செலுத்தாதவர்களை நெருங்கும் ஆர்பிஐ; அவசரச் சட்டம் அமல்!

இதுவரை 50 பேர் கொண்ட பட்டியலை ரிசர்வ் வங்கி தயார் செய்துள்ளது

வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை, வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களை ரிசர்வ் வங்கி விரைவில் நெருங்கி நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி, வராக் கடன்களை வசூலிப்பது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க, ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்ட திருத்தத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, இந்த அவசரச் சட்ட திருத்தம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி இதுவரை 50 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் வேண்டுமென்றே கடன் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கைகள் பாய உள்ளதாம்.

இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நள்ளிரவு வரை, குடியரசுத் தலைவர் இந்த அவசரச் சட்ட திருத்த கோப்புகளில் கையெழுத்து இடவில்லை. இதுகுறித்து நிதித்துறை அமைச்சரவை அதிகாரி ஒருவர் கூறிய போது, ‘இன்று இந்த சட்டத் திருத்தத்தில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட வாய்ப்புள்ளது” என்றார்.

மேலும், குறிப்பிட்ட காரணத்தைக் காட்டி கடனை வாங்கி, அதனை வேறொரு செயல்பாட்டிற்கு உபயோகப்படுத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதுதான் முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

×Close
×Close