காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது : கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்!

தமிழகத்திற்கு மே மாதம் 4 டிஎம்சி நீரைத் திறந்து விட உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவைப் பின்பற்ற இயலாது எனக் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் ஏற்கனவே இரண்டு காலக்கெடு முடிந்த நிலையில், மே மாதம் முடிவிற்குள் தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்தது. முன்னதாக மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றத் தவறியது. பின்னர் இது குறித்து எழுந்த விசாரணையின், உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்து, மே 3 தேதிக்குள் வரைவு திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கூறியது. ஆனால் இந்த உத்தரவையும் மத்திய அரசு பின்பற்றவில்லை.

மே 3ம் தேதி வரைவு திட்டம் குறித்து நடந்த விசாரணையில், கர்நாடக தேர்தலை காரணம் காட்டுவது சரியல்ல என்றும், மே 8ம் தேதி மீண்டும் இந்த விசாரணை நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. அதே நேரம், மே மாதம் 4 டிஎம்சி நீரைத் தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு அளித்தது. இந்த உத்தரவைப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

தற்போது இந்த விவகாரத்தில், கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், மழைப் பற்றாக்குறைவால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட இயலாது என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் கர்நாடகத்தில் நிலவி வரும் நீர் பிரச்சனையால் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீர் பங்கிலிருந்தும் அவர்கள் சிறிது எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். நாளை மீண்டும் வரைவு திட்ட அறிக்கை குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு இவ்வாறு திட்டவட்டமாக கூறியிருப்பது கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close