'மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காது!' - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசை காய்ச்சிய தமிழக அரசு

தீர்ப்பை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்வதெல்லாம் ஒரு பதிலா?

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டிய காவிரி வரைவு திட்ட அறிக்கை குறித்த விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “கர்நாடகாவில் வரும் 12 ஆம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில், காவிரி நதிநீர்ப்பங்கீடு தொடர்பான வழக்கை மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். 14ம் தேதி காவிரி சட்ட வரைவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.

காவிரி வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக மிகக் கடுமையான வாதங்களை, குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

விசாரணை தொடங்கிய போது வாதிட்ட மத்திய அரசு, ‘தண்ணீர் தர நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா அரசு கேட்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?. சட்டம் , ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதற்காக காவிரி விவகாரத்தில் முடிவெடுக்க முடியவில்லை. கர்நாடக தேர்தலால் காவிரி திட்ட விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளோம்’ என்று தெரிவித்தது.

இதையடுத்து தனது வாதத்தை தொடங்கிய தமிழக அரசு, ” ‘சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்வதெல்லாம் ஒரு பதிலா? மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு காவிரி நீர் கூட எங்களுக்கு கிடையாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாதவர்களை சிறைக்கு அனுப்பியிருக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கிறது என கூறிவந்தோம். கர்நாடக தேர்தல் வாக்குபதிவு மே12, வழக்கை மே 14க்கு ஒத்திவைக்க கேட்பதில் இருந்து அது உறுதியாகியிருக்கிறது. கடைசியில் திருட்டு பூனை வெளியே வந்துவிட்டது” என மத்திய அரசு மீது குற்றச்சாட்டை சுமத்தியது.

இதுவரை, இந்தளவிற்கு கடுமையான வாதங்களை மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு முன் வைத்ததில்லை.

இதைத் தொடர்ந்து, தீர்ப்பளித்த நீதிபதிகள், “உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாதது, நீதிமன்ற அவமதிப்பு செயல் தான். மத்திய அரசு, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியிருக்க வேண்டும் தான். வரைவு செயல்திட்டம் இந்நேரம் தயாராகி இருக்க வேண்டும். தீர்ப்பை அமல்படுத்துவதற்கான அமைப்பு உருவாகி இருக்க வேண்டும்.

கர்நாடகாவில் வரும் 12 ஆம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில், காவிரி நதிநீர்ப்பங்கீடு தொடர்பான வழக்கை மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.  வரைவுத் திட்டம் பற்றி மத்திய நீர் வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். மேலும், 14ம் தேதி காவிரி சட்ட வரைவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க – கர்நாடக தேர்தலுக்கு பிறகு காவிரி வழக்கு விசாரணை! – உச்சநீதிமன்றம் உத்தரவு

×Close
×Close