காவிரி வழக்கு : உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு?

காவிரி பிரச்னை தொடர்பான வழக்குகளின் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காவிரி பிரச்னை தொடர்பான வழக்குகளின் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காவிரி பிரச்னை, தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக வி.பி.சிங் காலத்தில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், முதலில் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. பின்னர் இறுதி உத்தரவு வெளியிடப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

காவிரி விவகாரத்தில் அது தமிழ்நாட்டின் உரிமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. அதாவது அரசிதழில் வெளியானதால் அதற்கு சட்ட அங்கீகாரம் உண்டு. எனவே நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை கர்நாடகம் அலட்சியம் செய்ய முடியாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகும் நடுவர் மன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்க கர்நாடகம் தயாராக இல்லை.

காவிரி பிரச்னையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வழக்கில், நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அது அமைந்திருந்தால், சுயேட்சையான ஒரு அமைப்பின் கீழ் காவிரி பாசன அணைகள் சென்றிருக்கும். ஆனால் மத்திய அரசு கடைசி நேரத்தில் அந்த உத்தரவுக்கு ஆட்சேபம் தெரிவித்து, நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது.

மீண்டும் அந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. நடுவர் மன்ற உத்தரவிட்டத்தை விட கூடுதல் நீர் கேட்டு தமிழ்நாடு தொடர்ந்த வழக்கு, மேகதாது பகுதியில் கர்நாடகம் புதிய அணை கட்டும் விவகாரம், நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு ஆகியனவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

இந்த வழக்குகளில் நாளை (பிப்ரவரி 16) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது, ‘கர்நாடகா புதிய அணை கட்டி, அதன் மூலமாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தந்தால் நல்ல விஷயம்தானே?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அந்த அடிப்படையில் புதிய அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி கிடைக்கும் என அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தீர்வு என வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது தீர்ப்பில் தெரிய வரும்.

 

×Close
×Close