காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்!

தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்திருந்தது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தற்போது வரை அந்த தீர்ப்பு நிறைவேற்றபடவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. நீதிமன்ற உத்தர‌வை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு முழுமையான வரைவுதிட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதுபற்றி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்பு, இந்த வழக்கு மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “ உச்சநீதிமன்றம் அறிவித்தப்படி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது, ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை” என்று தெரிவித்திருந்தது.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை, வரும் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி உடனடியாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில், வழக்கு நாளை(8.5.18)மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், இன்று(7.5.18) காவிரி வரைவு திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதனைத்தொடர்ந்து, தலைமை வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரமும் உச்ச நிதீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தீர்ப்பை செய்லபடுத்த மத்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close