சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியீடு... நொய்டா மாணவி முதலிடம்!

முதலிடம் பிடிப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை

சிபிஎஸ்இ என்று அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பிளஸ்2 தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் படித்த 10,98,891 பேர் எழுதினர். மாணவர்கள் 6,38,865 பேரும், மாணவிகள் 4,60,026 பேரும் தேர்வெழுதியிருந்தனர். இந்நிலையில், சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி Results.nic.in, Cbseresults.nic.in, Cbse.nic.in உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், நொய்டாவில் உள்ள அமிட்டி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ரக்‌ஷா கோபால் 99.6 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். சண்டிகரைச் சேர்ந்த புமி சாவந்த் 99.4 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரக்‌ஷா கோபால் ஆங்கிலம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். வரலாறு மற்றும் உளவியல் ஆகிய பாடங்களில் 99 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.இது தொடர்பாக மாணவி கூறும்போது, நான் தேர்வு நன்றாக எழுதியிருந்தேன். ஆனால், தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை என்று கூறினார்.

தேர்வெழுதிய 10,20,762 மாணவ மாணவிகளில், 8,37,229 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளின் சதவீதம் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 83.05 சதவீதம் என்றிருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 82 சதவீதமாக குறைந்துள்ளது. இதில் குறிப்பிடும்படியாக 10,091 மாணவ, மாணவிகள் 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல 63,247 மாணவ மாணவியர் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மேலும், தேர்வு முடிவு வெளியான நிலையில் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளன. 18000118004 என்ற என்னை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். ஆலோசனை வழங்குவதற்கு ஏற்றவாறு 65 பேர் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மாணவ, மணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close