சி.பி.ஐ டாப் 2 அதிகாரிகள் இடையே மோதல்: என்ன பிரச்னை இது?

சிபிஐ அதிகாரிகள் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இடையே பிரச்சனைகள் வலுத்து வருகிறது.  நாட்டின் மிக முக்கியமான சில வழக்குகளான மல்லையாவின் வங்கி மோசடி வழக்கு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு, மற்றும் லாலு பிரசாத் யாதவ்வுடன் தொடர்புடைய ஐஆர்சிடிசி வழக்குகளை விசாரித்து வருகிறார் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா.

இந்த விசாரணைகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பது தொடர்பாக பிரதம அமைச்சரின் கீழ் இயங்கி வரும் டிரைக்டரேட் ஆஃப் பெர்சனல் அண்ட் ட்ரெய்னிங் துறையிடம் இருந்து கடிதம் ராகேஷ் அஸ்தானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது இந்த விசாரணைகளை தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார் அலோக் வர்மா என்று மத்திய ஊழல் தடுப்பு ஆணையமான சிவிசிக்கு கடிதம் ஒன்றை எழுதினார் அஸ்தானா.

மறுப்பு தெரிவித்த அலோக் வர்மா

இது தொடர்பான தகவல்களை தரக் கோரி சிவிசி மத்திய புலனாய்வு துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியது. மேலும் அஸ்தானா விசாரித்து வரும் ஆறு வழக்குகள் தொடர்பான விபரங்களையும் கேட்டிருந்தது சிவிசி. இதற்கு பதில் அளித்த அலோக் வர்மா “அஸ்தானாவின் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்காகவே இப்படியான தகவல்களையும் தவறான புகார்களையும் கூறி வருகிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அஸ்தானா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார் அலோக் வர்மா.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

ராகேஷ் அஸ்தானா மீது இருக்கும் குற்றச்சாட்டுகள்

சந்தேசரா சகோதரர்கள் நடத்தி வந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் 5000 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கும் அடங்கும். அந்த வழக்கு தொடர்பான விசாரணையில் கைப்பற்றப்பட்ட நாட்குறிப்பின் அடிப்படையில் சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா, தீப்தி சேத்தன் சந்தேசரா, ராஜ்புஷன் ஓம்பிரகாஷ் தீக்சித், நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, விலாஸ் ஜோஷி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த நாட்குறிப்பில் அஸ்தானாவின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.  ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் அளிக்க வேண்டிய வருமானவரியை குறைப்பதற்கும் அஸ்தானா உதவியாக தெரிய வந்துள்ளது.

ஆனால் இது குறித்து அஸ்தானாவின் நெருங்கிய வட்டம் கூறும் போது” அஸ்தானா ஏதாவது தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க நம் சட்டம் வழி வகுத்திருக்கிறது. ஆனால் அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை” என்று கூறியிருக்கிறார்கள்.

இரண்டு இயக்குநர்களுக்கும் மத்தியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகார மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close