/indian-express-tamil/media/media_files/2025/10/05/forest-rights-act-2025-10-05-20-22-43.jpg)
வன உரிமைச் சட்டம்: 15% உரிமைக் கோரிக்கைகள் நிலுவை; விரைந்து முடிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
வன உரிமைச் சட்டம் (FRA), 2006-ன் கீழ் பெறப்பட்ட மொத்த வன மற்றும் சமூக நில உரிமைக் கோரிக்கைகளில் 15% இன்னும் நிலுவையில் உள்ளன. இதில் தெலுங்கானா, ஒடிசா, அசாம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக வழக்குகள் குவிந்துள்ளன. இந்த நிலுவைகளை விரைந்து முடிக்குமாறு, இந்த சட்டத்தை அமல்படுத்தும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் (MoTA) வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறும், அத்துடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பழங்குடியின நலத் திட்டமான 'தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான்' (DA-JGUA) கீழ் தொடங்கப்பட்ட அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்யுமாறும் அமைச்சகம் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய அரசின் கடிதத்தின்படி, நிலுவையில் உள்ள அதிகபட்ச உரிமைக் கோரிக்கைகள் தெலுங்கானா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் குவிந்துள்ளன. ஜூன் 1 நிலவரப்படி, பெறப்பட்ட 51.23 லட்சத்துக்கும் அதிகமான தனிநபர் மற்றும் சமூக உரிமைக் கோரிக்கைகளில், 20 மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 25.11 லட்சம் பட்டங்கள் (49.02%) மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மேலும் 7.49 லட்சம் உரிமைக் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன; 18.62 லட்சம் (36.35%) கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மே 31 நிலவரப்படி, அதிகபட்ச நிலுவை தெலுங்கானாவில் (3.29 லட்சம்) பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ஒடிசா (1.20 லட்சம்), அசாம் (96,000), குஜராத் (84,000), மகாராஷ்டிரா (28,000) உள்ளன. தெலுங்கானாவில் மொத்த உரிமைக் கோரிக்கைகளில் 50% க்கும் அதிகமாக நிலுவையில் உள்ளது. அசாம் மற்றும் குஜராத்தில் முறையே 62% மற்றும் 44% நிலுவையில் உள்ளன. மொத்த உரிமைக் கோரிக்கைகளின் விகிதத்தில் கோவா (87%) மற்றும் இமாச்சலப் பிரதேசம் (84.5%) ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச நிலுவை பதிவாகியுள்ளது.
வன உரிமைச் சட்டம் (FRA) என்றால் என்ன?
2006-ல் இயற்றப்பட்ட வன உரிமைச் சட்டம், பல தலைமுறைகளாக வன நிலங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளின் உரிமைகள் அங்கீகரித்து அவற்றை அவர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டது. வாழ்வதற்கும், வாழ்வாதாரத்திற்காக வன நிலத்தில் விவசாயம் செய்வதற்கும் உரிமை அளிக்கிறது. மேய்ச்சல், சிறு வனப் பொருட்களைச் சேகரித்தல், வன வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மீளுருவாக்கம் செய்தல் போன்ற சமூக உரிமைகளையும் இந்தச் சட்டம் வழங்குகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கடந்த செப்டம்பரில் நடந்த ஆதி கர்மயோகி அபியான் தேசிய மாநாட்டின் தொடர்ச்சியாக, இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் பணிகளை விரைவுபடுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. DA-JGUA திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள FRA தொடர்பான நடவடிக்கைகளை ஆய்வு செய்யுமாறும், சரியான திருத்தங்களைச் செய்யத் தடைகளைக் கண்டறியுமாறும் மாநிலங்களைக் கேட்டுள்ளது.
உரிமைக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க உதவுவதற்காக FRA அலகுகளை (FRA Cells) அமைத்தல். சமூக வன உரிமைகளை வழங்குவதற்காகப் சாத்தியமான வனப் பகுதிகளைப் படமெடுத்தல் (Mapping). FRA போர்ட்டல்களை உருவாக்குதல். அத்துடன், சமூக வன மேலாண்மை திட்டங்களை தயாரிப்பதற்கும், வனத்தைச் சார்ந்துள்ள வாழ்வாதாரங்களை நிர்வகிப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் கிராம சபைகளுக்கு நிதி உதவி அளிப்பது முக்கியமான ஆதரவாகும். சமூக வன வள மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.15,000 நிதி உதவியை MoTA வழங்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 1,000 சமூக வன வள மேலாண்மைத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், தமிழ்நாடு, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே சாத்தியமான பகுதிகளைப் படமெடுத்து FRA அட்லஸை வெளியிட்டு உள்ளன என்று அமைச்சகம் கூறியது. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் FRA அலகுகள் ஏற்கெனவே செயல்படுகின்றன.
டீர் (Tribal Ethos & Economics Research) அறக்கட்டளையின் மிலிந்த் தட்டே கூறுகையில், உரிமைகளை வழங்குவது மட்டுமல்லாமல், உரிமைகளை மாற்றியமைப்பது அல்லது ஓரளவு நிராகரிப்பது, மற்றும் சில உரிமைகளைத் தொடங்காதது போன்றவையே பெரிய பிரச்சினைகளாக இருக்கின்றன.
சமூக வன வள உரிமைகள் (CFRR): சமூக வன வள உரிமைகள் பல மாநிலங்களில் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த உரிமை சமூகங்களுக்கு வனங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிர்வகிப்பதற்கான பொறுப்பை வழங்குகிறது. மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் CFRR-ஐ அங்கீகரிப்பதில் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன.
அசாமின் டிமா ஹசாவ் மற்றும் கார்பி ஆங்லாங் போன்ற பகுதிகளில் தன்னாட்சி கவுன்சில்கள் இருந்தபோதிலும், FRA இன் கீழ் செயல்முறையே இன்னும் தொடங்கப்படவில்லை என்று தட்டே சுட்டிக்காட்டினார். தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான் (DA-JGUA) திட்டம், கடந்த 2024 அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இது, 17 துறைகளின் நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து, பழங்குடியினருக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கும் ஒரு குடைத் திட்டமாகும். இந்தத் திட்டம் பழங்குடியினத் தலைவரும், 'பூமியின் தந்தை' (தர்தி ஆபா) என்று அழைக்கப்படுபவருமான பிர்சா முண்டாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us