கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், கர்நாடக காங்கிரஸின் மூத்த தலித் தலைவருமான ஹெச்.சி.மகாதேவப்பா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு பேட்டி அளித்தார். இவர் கடந்த முறை பழைய மைசூர் பகுதியில் உள்ள டி.நரசிபுரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் பேசுகையில், பழைய மைசூருவில் கடந்த முறை இழந்த 30-க்கும் மேற்பட்ட இடங்களை மீண்டும் கைப்பற்றுவோம். பட்டியல், பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான பா.ஜ.க அரசின் முடிவை அரசியல் வித்தை” என்று மகாதேவப்பா விமர்சனம் செய்தார்.
2018-ல், பழைய மைசூரு பகுதியில் ஆட்சியில் இருந்த முதல்வரும், அமைச்சராக இருந்த நீங்களும் தோல்வியடைந்தீர்கள் என்ன தவறு நேர்ந்தது?
அரசு சிறப்பாகச் செயல்பட்டாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரச்சாரத்தால் பொதுமக்களால் சில விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதில் லிங்காயத் மதப் பிரச்சினை, உள் இட ஒதுக்கீடு மற்றும் துருவமுனைப்பு ஆகியவை அடங்கும். அப்போது நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம் ஆனால் பழைய மைசூருவில் சித்தராமையா (சாமுண்டேஸ்வரி தொகுதியில்) மற்றும் என்னுடைய தொகுதி உள்பட சுமார் 30 தொகுதிகளை இழந்தோம். எங்களைத் தோற்கடிக்க பா.ஜ.க மற்றும் ஜே.டி.எஸ் கட்சி கைகோர்த்து விளையாடின.
நான் தோல்வியடைந்த சூழலில், எனது தொகுதியில் உள்ள தொழிலாளர்களும் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். நான் அமைச்சராக இருந்தேன், அப்போது மாநிலம் முழுவதையும் கவனித்துக் கொண்டிருந்தேன், தொகுதியில் எனது கவனம் குறைவாக இருந்தது, இது எனது தோல்விக்கு வழிவகுத்தது.
காங்கிரஸ் வெற்றி கதையை உருவாக்க தவறிவிட்டது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, நீங்கள் சொல்வது தவறு. எதிர்க்கட்சியான எங்களால், பா.ஜ.க.வின் ஊழலைப் பற்றி பொதுமக்களிடம் கொண்டு செல்ல முடிந்தது.
40% கமிஷன், PSI ஆட்சேர்ப்பு ஊழல், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பாஜக அரசாங்கத்தின் பிற தவறுகளை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம். கடந்த 40 ஆண்டுகளில் கர்நாடகா கண்ட ஊழல் ஆட்சி இது. இது உண்மையில் பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அது தேர்தலில் எங்களுக்கு உதவும்.
எஸ்.சி மற்றும் எஸ்.டிகளின் இடஒதுக்கீட்டை பாஜக அதிகரிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
இது வெறும் தேர்தல் வித்தை. பா.ஜ.க. அதன் அடிப்படையில், அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீடுகளுக்கு எதிரானது. பாஜக தலைமையிலான மாநில அரசு சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எடுத்து திருப்பதி லட்டு போல விநியோகித்துள்ளது. இடஒதுக்கீட்டில் 50% வரம்பு இருக்கும் நிலையில், உச்ச வரம்பு அதிகரிக்காமல், பிறரிடமிருந்து இடஒதுக்கீட்டை அரசு பறித்துள்ளது. இடஒதுக்கீடு வரம்பை 50%க்கு மேல் உயர்த்த முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இடஒதுக்கீடு பிரச்சினை தேர்தலுக்குப் பிறகு அழிந்துவிடும், ஏனெனில் பாஜகவுக்கு தொலை நோக்கு பார்வையோ, மக்கள் அக்கறையோ இல்லை.
பழைய மைசூருவின் மனநிலை என்ன?
கடந்த முறை இழந்த தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் செய்த தவறுகளை சரி செய்ய கடுமையாக உழைத்துள்ளோம், வாக்காளர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். பாஜக ஆட்சியால் மக்கள் வெறுப்படைந்துள்ளதால் காங்கிரஸ் வேட்பாளர்கள் இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். சித்தராமையா அல்லது நான் மட்டுமல்ல, இங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும். வருணா தொகுதியில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் சித்தராமையாவை மக்கள் தேர்வு செய்வார்கள்.
நீங்கள் தான் முதல்வர் வேட்பாளரா?
முதலமைச்சராக ஆசைப்படுவதில் தவறில்லை. முதலமைச்சராக இருப்பவர் சுறுசுறுப்பாகவும் கடமைகளை சரியாக ஆற்றவும் வேண்டும். முதலில், பொதுமக்கள் எங்களுக்கு ஆணையை வழங்க வேண்டும், சட்டமன்றம் தேர்ந்தெடுக்கும். காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். இப்போது அதைப் பற்றி பேச முடியாது. சூழ்நிலை வரும் போது, அதைப் பற்றி பேசலாம்.
சாமராஜநகர் மற்றும் மைசூருவில் பிரியங்கா காந்தியை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்ததன் காரணம் என்ன?
பிரியங்கா காந்தி எங்கள் நட்சத்திர பேச்சாளர். அவர் உ.பி. தேர்தலை தனித்து கையாண்டார் என்பது உங்களுக்கு தெரியும். சாமராஜநகர் மற்றும் மைசூரு மாவட்டங்களில் அவரது பிரச்சாரம் அடித்தட்டு தொழிலாளர்களின் மன உறுதியை உயர்த்துவதற்காகவும், பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்காகவும் நடத்தப்பட்டது (அனைத்து மைசூரு தொகுதிகளிலும், பெண் வாக்காளர்களின் சதவீதம் 45% க்கும் அதிகமாக உள்ளது). இப்பகுதிக்கு அவரது வருகை ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“