காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தனது போட்டியாளரும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் மீதான தாக்குதலை செவ்வாயன்று தீவிரப்படுத்தியபோதும், காங்கிரஸ் மேலிடம் அதற்கு பதிலளிக்கவில்லை.
மேலும் ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுக்காததை எடுத்துக்காட்டுவதற்காக ஐந்து நாள் பாதயாத்திரையையும் பைலட் அறிவித்தார்.
கெலாட்டின் தலைவர் சோனியா காந்தி அல்ல, பாஜக தலைவர் வசுந்தரா ராஜே என்று தான் உணர்வதாக பைலட் கூறியபோதும், கர்நாடக தேர்தலில் இந்த பகை எதிரொலிக்க விரும்பாத காரணத்தால் காங்கிரஸ் அமைதியாக இருந்தது.
ஜெய்ப்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பைலட்டின் கருத்துக்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தொண்டர்களுக்கான பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவை அடைந்தபோது வந்தது.
ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவி வரும் பதற்றம் குறித்து உயர்நிலைக் குழு புதன்கிழமை அறிக்கை வெளியிடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே கெலாட்டின் நியாயம் இல்லாத தாக்குதல் குறித்து மேலிடம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக இரண்டு நாட்கள் காத்திருந்த பிறகு அவர் பகிரங்கமாக பொதுவில் செல்ல முடிவு செய்ததாக பைலட் முகாமின் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஞாயிற்றுக்கிழமை வசுந்தரா ராஜேவின் சொந்த மைதானமான தோல்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கவர்ந்து இழுத்து 2020ல் தனது அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சித் தலைமையின் ஒரு பகுதியினரின் முயற்சிகளை ஆதரிக்காததற்காக, கெலாட் இரண்டு பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முதல்வருக்கு எதிராக கிளர்ச்சி செய்த பைலட்டுக்கு விசுவாசமான சட்டமன்ற உறுப்பினர்கள் தான் கெலாட்டின் இலக்கு. இந்த எம்எல்ஏக்கள் பாஜகவிடம் பணம் பெற்றதாக முதல்வர் குற்றம்சாட்டினார்.
கடந்த மாதம் பைலட், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பகல் முழுவதும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தபோது, ராஜஸ்தானின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா இரவு 11 மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அடுத்த நாள் உண்ணாவிரதம் இருப்பது ‘கட்சி விரோதச் செயலாக’ இருக்கும் என்று அவரிடம் கூறினார்.
இப்போது, இரண்டு நாட்கள் கடந்துவிட்டன, மேலிடத்திலிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. கெலாட்டை கட்சித் தலைமை ஏற்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. மேலிடத்திடம் இருந்து கண்டனமோ எதிர்வினையோ இல்லை. எனவே மௌனத்தை ஏற்றுக்கொள்வது என்று பொருள் கொள்ளலாம், என்று பைலட்டுக்கு நெருக்கமான ஒரு தலைவர் கூறினார்.
தலைமை புதன்கிழமை தனது மௌனத்தை கலைக்கப்போவதாக சமிக்ஞை செய்தது. “நாங்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறோம், என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்பதை இன்று அல்லது நாளை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
பொறுமையாக இருங்கள் மற்றும் முடிவுகளை எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் நாளை தெரிந்துவிடும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தலைமை மாற்றம் வேண்டும் என்ற பைலட்டின் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் உயர்நிலைக் குழு உள்ளது. அதே சமயம், இரு தலைவர்களுக்கிடையில் தொடரும் வார்த்தைப் போரையும், அவ்வப்போது பதற்றம் அதிகரித்து வருவதையும் இனியும் புறக்கணிக்க முடியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“