இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

Corona surge in india and receives foreign helps: இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளிநாட்டிலிருந்து ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

புது தில்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் வெள்ளை மாளிகையின் கோவிட் -19 சோதனை கருவிகள்; கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஐ.டி.பி.பி மருத்துவமனையில் ஒரு இத்தாலிய ஆக்ஸிஜன் ஆலை; புது தில்லியில் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு பிரெஞ்சு ஆக்ஸிஜன் ஆலை; மற்றும் சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ.யில் ஐரிஷ் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள். இவையெல்லாம் வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட உதவிகளில் சில…

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், உலகளாவிய சமூகத்திலிருந்து உதவி பெருகுவதோடு, வெளிநாட்டு உதவிகளை ஏற்காத 16 ஆண்டுகால கொள்கையிலிருந்து இந்தியா மாறுபட்டுள்ளதால், டெல்லி மற்றும் பிற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளிநாட்டிலிருந்து ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

குறைந்தது 14 நாடுகள் ஏற்கனவே தங்கள் பொருட்களை விமானம் மற்றும் கப்பல்களில் அனுப்பத் தொடங்கியுள்ளன, அவை பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

சுகாதார அமைச்சகத்தினால் கூறப்பட்ட தேவையான பொருட்கள், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்றன என்று தகவல்கள் கிடைக்கின்றன.

அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, தாய்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவுகின்றன. இவற்றில் சில நாடுகள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அனுப்புகின்றன. சில நாடுகள் ஆக்ஸிஜன் ஆலைகளை உருவாக்கி வருகின்றன. சில நாடுகள் வென்டிலேட்டர்களை அனுப்புகின்றன. சில நாடுகள் கொரோனா சோதனை கருவிகளையும் அத்தியாவசிய மருந்துகளையும் அனுப்புகின்றன.

இதுவரை அனுப்பப்பட்ட பொருட்கள்:

* அமெரிக்காவிலிருந்து பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் சப்தர்ஜங் மருத்துவமனைக்குச் சென்றுள்ளன. அமெரிக்காவிலிருந்து சுமார் 7 லட்சம் கொரோனா கண்டறிதல் கருவிகள் (வெள்ளை மாளிகை பயன்படுத்தும் வகை)  சஃப்தர்ஜங், எய்ம்ஸ் ஜஜ்ஜார், ஐசிஎம்ஆர் மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுள்ளன. மேலும், அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து ஒரு பெரிய ஆக்ஸிஜன் ஆலை இந்தியா வந்துள்ளது.

* 20 பெரிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 75 நுரையீரல் வெண்டிலேட்டர் உபகரணங்கள் மற்றும் 150 படுக்கை மானிட்டர்கள் ரஷ்யாவிலிருந்து புதுதில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றுள்ளன.

ரஷ்யாவிலிருந்து வந்த 2 லட்சம் ஃபிளாவிபிராவிர் (வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்து) மருந்துகளில், 25,000 சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கும், 2,000 எல்.எச்.எம்.சிக்கும், 30,000 எய்ம்ஸ் ரிஷிகேஷுக்கும், 40,000 எய்ம்ஸ் ஜோத்பூருக்கும், 10,000 எய்ம்ஸ் ராய் பரேலிக்கும், 30,000 ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கும், 38,000 எய்ம்ஸ் டெல்லிக்கும் மற்றும் 25,000 எய்ம்ஸ் ஜஜ்ஜருக்கும் அனுப்பட்டுள்ளன.

* பிரான்சிலிருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தரம்ஷிலா நாராயண சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை, டெல்லியில் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை, டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகர் மருத்துவமனை, மற்றும் தெலுங்கானா மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றிற்கு வந்துள்ளன. ஒரு ஆக்ஸிஜன் ஆலை மூலம் 250 மருத்துவமனை படுக்கைகளுக்கு ஆகிசிஜன் அளிக்க முடியும் என்றும், இந்த ஆக்சிஜன் ஆலை 12 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தாய்லாந்தில் இருந்து வந்த 30 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளில் 15 சிஜிஹெச்எஸ் மருத்துவமனைக்கும், 15 சப்தர்ஜாங் மருத்துவமனைக்கும் சென்றுள்ளன.

* அயர்லாந்தில் இருந்து 700 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சண்டிகரின் பி.ஜி.ஐ மருத்துவமனைக்கும் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் அனுப்பட்டுள்ளன.

* கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஐ.டி.பி.பி மருத்துவமனையில் இத்தாலியைச் சேர்ந்த ஆக்ஸிஜன் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

* ஜெர்மனியில் இருந்து 120 வென்டிலேட்டர்கள் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மே 26 முதல் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் இவைதான் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெர்மன் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கூறுகையில், இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட 120 வென்டிலேட்டர்கள் ஜெர்மனிய அரசாங்கத்திலிருந்து இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டவை, இன்னும் பல உதவிகள் தனியார் துறை மூலம் வர உள்ளன என்றார்.

மேலும், “டாடா நிறுவனம் 20 மொபைல் ஆக்ஸிஜன் டேங்கர்களை இறக்குமதி செய்கின்றன, FICCI மற்றும் ஜெர்மன் நிறுவனங்கள் 1,500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளைக் கொண்டு வருகின்றன” என்று லிண்ட்னர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார், மேலும், ஒரு இந்திய இராணுவ மருத்துவமனைக்கு இரண்டு ஏ -400 விமானங்களில் ஒரு பெரிய ஆக்ஸிஜன் ஆலை கொண்டு வரப்படுகிறது. இது இந்திய மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் லிண்ட்னர் கூறினார்.

இந்த உதவியின் பயனாளிகள் குறித்து நன்கொடை வழங்கிய நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளை பொறுத்த வரையில், தூதரக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப குழுக்கள் உள்ளூர் மருத்துவமனைகளுடன் இணைந்து ஆக்ஸிஜன் ஆலைகளை அமைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கி வருகின்றன.

சுமார் 10 நாட்களில் இந்த ஆக்ஸிஜன் ஆலைகளை அமைப்பதாக பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனெய்ன் தெரிவித்தார். 28 வென்டிலேட்டர்களுடன் சுமார் 28 டன் உபகரணங்கள் விமானத்தில் கொண்டு வரப்பட்டன. “நாங்கள் இந்திய மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குகிறோம், அவர்களுக்கு சரியான திறன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அங்கு ஆலையை நிறுவ உள்ளோம், அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்று லெனெய்ன் தெரிவித்துள்ளார்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இத்தாலிய ஆக்ஸிஜன் ஆலைக்கு, சுமார் 18 தொழில் வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள்  ஒரு முழு மருத்துவமனைக்கும் ஆக்சிஜன் வழங்கக்கூடிய இயந்திரத்தை அமைக்க வந்திருக்கிறார்கள். இந்த ஆலை, 20 நுரையீரல் சுவாசக் கருவிகளுடன், இத்தாலிய விமானப்படை சி -130 மூலம் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவிற்கான இத்தாலிய தூதர் வின்சென்சோ டி லூகா கூறுகையில், “கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இத்தாலி இந்தியாவுடன் நிற்கிறது. இது ஒரு உலகளாவிய சவால், நாம் ஒன்றாக சமாளிக்க வேண்டும். இத்தாலி வழங்கிய மருத்துவக் குழு மற்றும் உபகரணங்கள் இந்த பயங்கரமான தருணங்களில் உயிர்களைக் காப்பாற்ற பங்களிக்கும். ” என்றார்.

இங்கிலாந்து, அயர்லாந்து, ருமேனியா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, தைவான், குவைத், பிரான்ஸ், தாய்லாந்து, ஜெர்மனி, உஸ்பெகிஸ்தான், பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து ஏப்ரல் 27 முதல் அரசாங்கம் உதவிகளை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே 4 வரை, இந்தியா 1,764 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 1,760 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஏழு ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 450 வென்டிலேட்டர்கள் மற்றும் 1.35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரெமெடிசிவர் மருந்து குப்பிகளைப் பெற்றுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த உதவிகள் பெரிய அளவில் இல்லை என்றாலும்  “உடனடி தேவைகளை” பூர்த்தி செய்ய உதவுவதாகவும், “அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களுக்கு” உடனடியாக அனுப்பப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிநாட்டு உதவிகளை அனுப்ப மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுப்பது குறித்து, சுகாதார அமைச்சகம் “சமமான விநியோகம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார வசதிகளின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு” ஒதுக்கீடுகளை செய்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதன்கிழமை அன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சுகாதாரத் துறை கூடுதல் செயலாளரின் கீழ் ஒரு குழு ஏப்ரல் 26 முதல் “வெளிநாடுகளிலிருந்து மானியங்கள், உதவி மற்றும் நன்கொடைகளாக வரும் கொரோனா நிவாரணப் பொருட்களை பெறுதல் மற்றும் ஒதுக்கீடு செய்வதை ஒருங்கிணைப்பதற்காக” செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

“நாங்கள் உதவியை முறையாகப் பயன்படுத்த விரும்புகிறோம், அரசாங்க நடைமுறைகளில் அதிக நேரத்தை வீணாக்காமல் முடிந்தவரை திறம்பட பயன்படுத்த விரும்புகிறோம்” என்று வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு பங்குதாரர்களிடையே சந்திப்பு நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona india receive foreign helps o2 plants ventilators

Next Story
தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: மேற்கு வங்கத்திற்கு விரைந்த உள்துறை அமைச்சக குழுUnion Home Ministry, MHA forms four member team, மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்கம் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை, விசானை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைப்பு, 4 member team to probe post poll violence in West Bengal, west bengal, post poll violence in West Bengal, mamata banerjee
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com