/tamil-ie/media/media_files/uploads/2020/04/template-2020-04-19T104138.326-2.jpg)
Covid-19 Cases Update : மே மாதம், 3ம் தேதிக்குப் பின், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது நிபந்தனைகளுடன் தளர்த்துவதா என்பது குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கை, 17 ம் தேதி வரை தொடரலாம் என்றும், குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் என்றும் பெரும்பாலான முதல்வர்கள் தெரிவித்தனர்.
அப்போது, ''தொற்று அதிகம் உள்ள சிவப்பு நிறமிடப்பட்டுள்ள பகுதிகளை, பாதிப்பு குறைந்த ஆரஞ்சு நிறப் பகுதிகளாகவும், தொடர்ந்து அவற்றை, பாதிப்பு முற்றிலும் நீங்கிய பச்சை நிறப் பகுதிகளாகவும் மாற்றும் வகையில், அனைவரும் பணியாற்ற வேண்டும்,'' என அவர்களிடம், மோடி கேட்டுக் கொண்டார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தில், ஐந்து மாநகராட்சிகளில், அமல்படுத்தப்பட்டுள்ள முழுமையான ஊரடங்கு, . எதிர்பார்த்ததை விட, இது அதிக பலனை தந்துள்ளதால், அனைத்து சிவப்பு மண்டல பகுதிகளிலும், முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், நகரப் பகுதிகளில் தான், நோய் தொற்று அதிகரித்தபடி உள்ளது. குறிப்பாக, சென்னையில், தினமும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று பாதிக்கப்பட்ட, 52 பேரில், 47 பேர், சென்னைவாசிகள்; நான்கு பேர், மதுரையைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்.'நகரங்களில், ஊரடங்கை கடுமையாக்கினால் மட்டுமே, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்' என, மருத்துவ வல்லுனர்கள், அரசிடம் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த கூலித்தொழிலாளருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியான கூலித்தொழிலாளி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 4 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,868 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 684 பேர் குணம் குணமாகி உள்ளதாகவும் கூறினார். ஐ.சி.எம்.ஆர். ஆய்வு முடிவை அறிவிக்கும் வரையிலும், பிளாஸ்மா சிகிச்சையை சோதனை நோக்கிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் 202 பகுதிகள் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 53 பகுதிகள் உள்ளது!
நேற்று 168 பகுதிகளாக இருந்த நிலையில், இன்று 202ஆக உயர்வு - சென்னை மாநகராட்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊருக்கு கொரோனா வந்து விடக்கூடாது என்ற அச்சத்தால் கிராமங்களுக்கு செல்லும் சாலைகளை முள் மற்றும் கல் கொண்டு அடைத்துள்ளனர். இதனால் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலம் பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை ஓமலூர் வழியாக சேலம் சென்று வருபவர்கள் போலீசார் அதிக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வளைகுடா நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் பலர் தாயகம் திரும்பிட விரும்புகிறார்கள் என்பது, அவர்களுடன் நடத்திய காணொலி உரையாடலின் வாயிலாகத் தெரியவந்ததாக கூறியுள்ளார். வெளிநாடுகளில் தவிக்கும் மாநில மக்களை,மத்திய அரசோடு இணைந்து, கேரளா அரசு எப்படி மீட்டு கொண்டு வர திட்டமிட்டுள்ளதோ, அதே போல், தமிழக அரசும், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பொது முடக்கம் மே 3-ம் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது முடக்கம் தளர்த்தப்பட்டால், ரயில் பயணிகள் சமூக விலகலை பின்பற்றி பயணிக்கும் வகையில், அனைத்து ரயில்நிலையங்களும் மீண்டும் செயல்படுவதற்கு தயாராகி வருகின்றன. சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் 6 அடி இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. அதேபோல், டிக்கெட் கவுண்டர்களில் 6 அடி இடைவெளியில் கோடுகள் போடப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றுவதற்கு இந்த ஏற்பாடு என ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை, கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக தொற்று பதிவாகவில்லை. கடந்த 14 நாட்களில், 47 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை. கடந்த 21 நாட்களில், 39 மாவட்டங்களிலும், 28 நாட்களாக 17 மாவட்டங்களில் கொரோனாவால் யாரையும் பாதிக்கப்படவில்லை என்று கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்களின் மாத சம்பளம் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது.” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்: இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தயாரிக்கப்படும். ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்ததும் இந்தியாவில் ரேபிட் டெஸ் கிட் கருவிகள் தயாரிப்பு தொடங்கும். ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்தால் மே31-ம் தேதிக்குள் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரேபிட் டெஸ் கிட் கருவிகள் தயாரிக்க முடியும்” என்று கூறினார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெருக்கடியான நேரத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. * இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல” என்று தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து வியாபாரிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்கள், நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியம் என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 32 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் யாருக்கும் பாதிப்பில்லை. தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த சிறந்த வாய்ப்பாக கருதுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது எதிரொலியாக இந்த சந்தை கேளம்பாக்கம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்தை இடமாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் ஆலோசனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கலில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 42 பேர் வெளியே செல்ல தடை * மறு உத்தரவு வரும் வரை வீட்டை விட்டு வெளியே வர கூடாது என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். . பாலகிருஷ்ணாபுரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 42 பேர் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக வெளியே செல்லும் போது நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வாங்கிய, 24 ஆயிரம், 'ரேபிட் டெஸ்ட் கிட்'கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதில், அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights