scorecardresearch

அதிக தடுப்பூசிகளை கோரும் மாநில அரசுகள்; அரசியல் செய்கின்றனர் என மத்திய அரசு குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது முற்றிலும் ஆதாரமற்றது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

அதிக தடுப்பூசிகளை கோரும் மாநில அரசுகள்; அரசியல் செய்கின்றனர் என மத்திய அரசு குற்றச்சாட்டு

Covid-19 second-wave : மத்திய மாநில அரசுகளுக்கு இடையே கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் திட்டங்களுக்கு மத்தியில் தற்போது புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம், கொரோனா தொற்றில் மீண்டும் வளர்ச்சியை காணும் மாநிலங்கள் அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் மாநில அரசுகள் இதனை அரசியலாக்க பார்க்கின்றார்கள். போதுமான சோதனைகள் மற்றும் தடம் அறிதல் போன்றவற்றை இவர்கள் செய்யாமல் பொய்களை பரப்புகிறார்கள் என்று மாநில அரசுகள் மீது மத்திய அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் படிக்க : தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா; சென்னையில் நோய் தொற்று அதிகரிப்பு

Covid-19 second-wave

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மகாராஷ்ட்ரா, டெல்லி, பஞ்சாப் போன்ற, இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை கடுமையாக சாடியதோடு அவர்கள் தங்களின் மோசமான தடுப்பூசி நிர்வாகத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார். இருப்பினும் தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில், “தடுப்பூசி விநியோகம் கட்டுக்குள் தான் இருக்கிறது”, இந்த நிலைமை இப்படியே தொடரும் பட்சத்தில் குறிப்பிட்ட வயதினருக்கு தடுப்பூசி வழங்குவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

அனைத்து முதல்வர்களுடன் பிரதமர் கொரோனா இரண்டாம் அலை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சரின் அறிக்கை வெளியாகியுள்ளது. புதன் கிழமை அன்று, பிசினஸ் ஸ்டாண்டர்ட் நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்த சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவல்லா, சீரம் நிறுவனம், கோவிஷீல்டின் உற்பத்தியை இரட்டிபாக்க சில ஆயிரம் கோடிகளை அரசிடம் இருந்து நிதியாக கேட்டது என்று கூறினார். அந்த நிதி கிடைக்கும் பட்சத்தில் இரண்டு மாதங்களில் இரட்டிப்பு மடங்கில் தடுப்பூசிகளை வழங்குவோம் என்று அவர் கூறினார்.

தற்போது மானியம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் ஏதும் இல்லை. என்ன கொடுக்கப்பட்டது, என்ன நிறுவனங்கள் கேட்டன, என்பது அனைத்தும் முன்கூட்டியே வழங்கப்பட்ட நிதியை கொண்டது. அவை கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்ட போது சரி செய்யப்பட்டன. இது பணப்புழக்க நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் சீரம் நிறுவனம் மானியம் கேட்டதா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்றார். மோடி – முதல்வர் சந்திப்பிற்கு ஒரு நாள் முன்பாக மேலும் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், பணியிடங்களில் ஏப்ரல் 11ம் தேதியில் இருந்து தடுப்பூசியை வழங்க ஏற்பாடு செய்தல் ஆகும்.

தன்னுடைய அறிக்கையில், கோவாக்ஸின் தடுப்பூசியை ஏற்றக் கொள்ளாத சத்தீஸ்கர் மாநில அரசை கடுமையாக சாடினார். உலகத்திலேயே தடுப்பூசியை பெறுவதற்கு தயக்கம் காட்டும் ஒரே அரசு இந்த மாநில அரசாகதான் இருக்க முடியும் என்றார். கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் சோதனை செய்யும் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Covid19 second wave

பாதிக்கப்பட கூடிய மக்கள் மத்தியில் இறப்பு விகிதத்தை குறைப்பது தான் மத்திய அரசின் முதன்மை இலக்கு என்பதை மீண்டும் ஊர்ஜிதம் செய்த ஹர்ஷ் வர்தன், தடுப்பூசிகள் விநியோகத்தில் உச்ச வரம்பு இருக்கின்ற வரை, முன்னுரிமை அளிப்பதை தவிர நம்மிடம் வேறெந்த வழியும் இல்லை என்றார். உலக அளவிலும் இது தான் நடைமுறையாகும். இது மாநில அரசுகளுக்கும் நன்கு தெரியும். மகாராஷ்ட்ரா அரசை இலக்காக வைத்து, சில மாநில அரசுகள் தங்கள் தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு இழிவான முயற்சிகளை மேற்கொண்டு வருவது மட்டுமின்றி, மக்கள் மத்தியில் அச்சத்தையும் தூண்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

கொரொனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மகாராஷ்ட்ரா அரசு அதிகமாக உழைக்க வேண்டும். பின்பு மத்திய அரசு அனைத்து வகைகளிலும் அம்மாநிலத்திற்கு உதவும். ஆனால் அவர்களின் முழுமையான சக்தியையும் பயன்படுத்தி அரசியல் செய்தும், பொய்களை பரப்பியும் வருவது மகாராஷ்ட்ரா மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அவர் கூறினார்.

Covid-19 second-wave

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து வெளியான அறிக்கைகள் தொடர்பாக பேசிய அவர், மாநிலங்கள் கோரிக்கை விநியோகத்தின் நிலை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் தடுப்பூசியின் தேவை – விநியோகம் தொடர்பான அனைத்து தரவுகளையும் அடிக்கடி, வெளிப்படையாக அறிவித்து வருகின்றோம். இதனை அடிப்படையாக கொண்டே தடுப்பூசி உத்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது. உண்மையில் அனைத்து தடுப்பூசி உத்திகளும் அனைத்து மாநில அரசாங்கங்களுடனும் இணைந்து விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகே மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார் அவர்.

மகாராஷ்ட்ரா அரசின் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து வந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மகாராஷ்ட்ரா அரசு முயற்சிகளின் தொடர் தோல்விகளில் இருந்து திசை திருப்ப இது கூறப்படுகிறது. மகாராஷ்ட்ரா அரசாங்கம் பொறுப்புடன் செயல்படாமல் இருப்பதையே அது காட்டுகிறது. மேலும் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்புவது மேலும் மோசமானது. நிகழ்கால அடிப்படையில் தடுப்பூசி விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசுகளுக்கு இது தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டும் வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது முற்றிலும் ஆதாரமற்றது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ப்ரகாஷ் ஜவடேகர் கருத்து

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட கொரோனா விநியோகம் தொடர்பான தரவுகளை வெளியிட்டார். “தடுப்பூசி தொடர்பாக மகாராஷ்ட்ரா அரசு அரசியல் செய்ய கூடாது. உண்மை நிலவரம் இதோ. இந்நாள் வரையில் அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் அளவு 1,06,19,190, பெறப்பட்டது – 90,53,523 (அதில் 6%, அதாவது 5 லட்சம் தடுப்பூசிகள் வீணானது), பைப்லைனில் இருக்கும் தடுப்பூசிகள் எண்ணிக்கை 7,43,280. தற்போது இருக்கும் தடுப்பூசிகளின் இருப்பு 23 லட்சமாகும்.

மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகியவை முன்னுரிமை வழங்கப்பட்ட வயதினருக்கு தடுப்பூசி போடப்படுவதை மோசமாக விமர்சித்த ஹர்ஷ் வர்தன், “18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க மாநில அரசுகள் கேட்கும்போது, ​​அவர்கள் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறார்கள் என்று நாம் கருதுவோம். ஆனால் உண்மைகள் முற்றிலும் வேறுபட்டவை, ”என்றார்.

மேலும் படிக்க : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதி?

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முறையே 86% மற்றும் 46% சுகாதார ஊழியர்கள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர். டெல்லியில் 72% மற்றும் 41% என முறையே முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை சுகாதாரத்துறை ஊழியர்கள் பெற்றுள்ளனர். பஞ்சாப்பில் 64% மற்றும் 27% என்று முறையே முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு புறத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 90% முதல்கட்ட தடுப்பூசிகளை சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளன. அதே போன்று 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 60% இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளன என்று ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா வெறும் 25% தடுப்பூசி போட்டுள்ளது, டெல்லி 30% தடுப்பூசி போட்டுள்ளது; பஞ்சாப் 13% மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. ஏற்கனவே 50% க்கும் அதிகமான தடுப்பூசிகளை மூத்த குடிமக்களுக்கு 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே வழங்கியுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

மகாராஷ்டிரா அரசாங்கத்தின் குறைபாடுள்ள அணுகுமுறை வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் மொத்த முயற்சிகளையும் குறைத்துவிட்டது” என்று சுகாதார அமைச்சர் கூறினார். அதிகப்படியான நோய் தொற்று மட்டுமின்றி இறப்பு விகிதத்தையும் கொண்டிருக்கும் மாநிலம் மகாராஷ்ட்ராவாகும். உலகில் அதிகப்படியான கொரோனா தொற்றை கொண்டுள்ள மாநகரம் இதுவாகும். சோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்படவில்லை. தடமறிதலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றார்.

சத்தீஸ்கர் குறித்து பேசும் போது, அதன் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு தனது ஆற்றலை மையப்படுத்த வேண்டும் என்றார். சத்தீஸ்கர் மாநில தலைவர்களிடம் இருந்து வரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான கருத்துகள் தவறான செய்திகளையும் அச்சத்தை பரப்புவதையுமே அடிப்படையாக கொண்டுள்ளது. அரசியலாக்குவதை விடுத்து மாநில அரசங்கள் தங்களின் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். சத்தீஸ்கர் கடந்த 2-3 வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கண்டிருக்கிறது. அவற்றின் சோதனை விரைவான ஆன்டிஜென் சோதனைகளை பெரிதும் சார்ந்துள்ளது, இது ஒரு புத்திசாலித்தனமான உத்தி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளரால் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் (EUA) வழங்கப்பட்ட போதிலும் கோவாக்ஸின் மருந்தினை மாநில அரசு பெற மறுத்துள்ளது. இது மட்டும் அல்லாமல், அம்மாநில அரசின் தலைவர்கள் தடுப்பூசி தயக்கத்தைத் தூண்டிய உலகின் ஒரே அரசாங்கம் என்ற சந்தேகத்திற்குரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Covid 19 second wave states ask for more vaccines centre accuses them of playing politics

Best of Express