சிபிஐ - சிபிஎம் இடையே மாநிலங்கள் அளவில் ஒருங்கிணைப்புக் குழு: டி.ராஜா நம்பிக்கை

D Raja interview: கம்யூனிஸ்ட் இயக்கத்தை கொள்கை அடிப்படையில் நாங்கள் ஒன்றிணைக்க இருக்கிறோம். கை தட்டக்கூட உங்களுக்கு இரண்டு கைகள் தேவை.

மனோஜ் சி ஜி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட டி.ராஜா டெல்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் சீனியர் அசிஸ்டண்ட் எடிட்டர் மனோஜ் சி ஜி -க்கு பேட்டி அளித்தார். அதில் இருந்து…

கேள்வி: நீங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிக்கலான காலத்தில் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளீர்கள். இது எவ்வளவு பெரிய சவால்?

பதில்: சமீபத்திய தேர்தல் ஒட்டுமொத்த இடதுசாரிகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு பின்னடைவு. மற்றொரு புறம் ஒரு வலதுசாரி கட்சி முழு பலத்துடன் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் தங்களுடைய அரசியல் திட்டமான தேசத்தையும் தேசத்தின் பண்பாட்டு வரலாற்றையும் மறுவரையறை செய்கிற வேலையை நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள். பொருளாதாரக் கொள்கைகளில் அவர்களுடைய மொழியின் தாக்கம் இருந்தாலும் அவை எல்லாமே மக்கள் விரோத பிற்போக்கு நடவடிக்கைகளாக உள்ளது. மற்றொரு புறம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காகவும் ஜனநாயகத்துக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் இதர பிரச்னைகளுக்காகவும் நாங்கள் போராடுவோம்.

கேள்வி: இடதுசாரிகள் எப்போதும் வளர்ந்துவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுப் பிரச்னையை எழுப்புகிறார்கள். வேலை இழப்பு, வேலைவாய்ப்பின்மை ஆகியவை இன்னும் அதிகரித்துள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். இது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பலம்பெறுவதற்கு நல்ல சூழ்நிலை. ஆனால், இடதுசாரிகள் தங்களுடைய இடத்தை இழந்து வருகிறார்களே?

பதில்: நிச்சயமாக. இடதுசாரிகளின் பொருத்தப்பாடு முடிந்துவிட்டது என்று கூறி இடதுசாரிகளின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் சில அறிவுஜீவிகளின் வாதங்களை நாங்கள் கேட்பதில்லை. இடதுசாரிகள் எப்போதும் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். இடதுசாரி அரசியல் எப்போதும் நாட்டுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையாக இருக்கும்.

கேள்வி: ஆனால், தேர்தல் அரசியலில் நீங்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றிருக்கிறீர்களே?

பதில்: தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், பாஜக அரசியலிலும், மக்கள் போராட்டத்திலும் வெற்றி பெற்றுவிட்டதாக உரிமை கோர முடியாது.

கேள்வி: ஆனாலும், இது இடதுசாரிகள் தங்களை மறுபரிசீலனை செய்துகொள்ளவேண்டிய நேரமில்லையா அல்லது உங்களுடைய சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் வழியை திறானாய்வு செய்ய வேண்டிய நேரமில்லையா?

பதில்: இடதுசாரிகள் இந்திய சமூக யதார்த்தத்தை அறிந்திருக்கிறார்கள். மார்க்சியம் ஒரு அறிவியல். ஒரு அறிவியலை நீங்கள் எப்படி பொருத்துவீர்கள். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு அந்த சித்தாந்தத்தை நீங்கள் எப்படி பொருத்துவீர்கள்? இந்திய சமூகம் ஒரு கலவையான சமூகமாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் சமூகத்தின் மேல்கட்டுமானத்தையும் அடிப்படை உறவுகளையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் சமூக பிரச்னைகளையும், சாதிய பிரச்னைகளையும், சமூக பிரிவுகளையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறிந்திருகிறார்கள். அதனால், பொருளாதார தேவைகளின் அடிப்படையில் மட்டுமே போராடி இந்திய புரட்சியை வெல்ல முடியாது.

கேள்வி: நீங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலித் பொதுச் செயலாளராகியிருக்கிறீர்கள். உங்கள் கட்சி சமூக சமத்துவத்தை பேசினாலும், ஒரு தலித்தை பொதுச்செயலாளராக நியமிப்பதற்கு ஏன் இவ்வளவு நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டது?

பதில்: இது இந்திய சமூக யதார்த்தத்தைதான் பிரதிபலிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அப்படி ஒரு குறுகலான சூழ்நிலையில் இல்லை. மேலும், இது கம்யூனிஸ்ட் கட்சி மாறிவருகிறது என்பதையே காட்டுகிறது.

கேள்வி: ஆனாலும், அது ஏன் இவ்வளவு நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டது?

பதில்: இது ஒரு இந்திய அமைப்பு. தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கரும், காந்தியும் எப்படி போராடினார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் சமீபத்தில், சாதி தேசவிரோதமானது என்று நாடாளுமன்றத்தில் கூறினேன். நீங்கள் புதிய இந்தியாவை கட்ட விரும்பினால், புதிய இந்தியாவில் சாதியும், கையால் சாக்கடை அள்ளும் தொழிலும் இருக்காது என்று அறிவியுங்கள் என்று நான் பாஜகவிடம் கூறினேன்.

கேள்வி: உங்களுடைய உடனடி முன்னுரிமை என்ன?

பதில்: நாம் மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி, நடவடிக்கைகளிலும், இயக்கங்களிலும், போராட்டத்திலும் அவர்களை வழிநடத்த வேண்டும். மக்கள் எழுந்து நின்று போராட வேண்டும், எதிர்க்க வேண்டும். அவர்கள் தாழ்ந்த நிலையில் இருக்க முடியாது, அரசாங்கம் ஆணையிடும் எந்தவொரு விஷயத்திற்கும் அடிபணிய முடியாது.

கேள்வி: தர்ணா, பந்த், ஜந்தர் மந்தர் நோக்கி நடைபயணம் போன்ற இடதுசாரிகள் நடத்தும் மரபான போரட்ட வடிவங்கள் காலாவதியானவை என்று நீங்கள் கருதவில்லையா? இவற்றை இடதுசாரிகள் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: அந்த வடிவங்கள் அப்படியே அங்கேயே இருக்கும். வேறு வடிவங்கள் உருவாகிவரும். எதிர்வினை ஆற்றுவதற்கு, அரசாங்கம் என்ன செய்கிறதோ அதுவே போராட்ட வடிவத்தையும் தீர்மானிக்கிறது. அதனால், இங்கே எதிர்ப்பு இருக்கும்போது அந்த எதிர்ப்பு எந்த வடிவத்தையும் எடுக்கலாம்.

கேள்வி: கடந்த 5 – 10 ஆண்டுகளில் புதிய தலைவர்கள் உருவாகி வருவதை நாம் பார்க்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலில் இருந்து ஜிக்னேஷ் மேவானி மற்றும் சந்திரசேகர் ஆசாத் வரை இவர்கள் அனைவரும் வழக்கத்திற்கு மாறான தலைவர்களாக உருவாகிவருகின்றனர். இவர்கள் இடது சாரிகள் எழுப்பிய அதே பிரச்னையை எழுப்புகிறார்கள். ஒரு நல்ல வழியில் இது மக்கள் மனங்களில் எதிரொலிக்கிறதா?

பதில்: இது வழக்கத்திற்கு மாறானது இல்லை. அரசியல் கட்சிகள் ஒரு அமைப்பாக்கப்பட்ட தலைவர்களை வழங்கவில்லை என்றாலும்கூட மக்கள் வெளியேறிப் போய்விடுவதில்லை இங்கே தன்னிச்சையான போராட்டங்களும் புரட்சிகளும் ஏற்படுகின்றன. தன்னிச்சையான போராட்டங்கள் இருக்கிற காரணத்தால் கம்யூனிஸ்ட்கள் அதனை முன்னெடுப்பார்கள்.

கேள்வி: இடதுசாரிகள் எழுப்புகிற இந்த பிரச்னைகளில் நீங்கள் சரியான நேரத்தில் அந்த இடத்தை நிரப்பவில்லையா?

பதில்: அந்த இடத்தில்தான் கட்சி அடிமட்டத்தில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். கட்சி மக்களுடன் இருக்க வேண்டும். கட்சி வெகுஜன மக்களுடன் இருக்கிறது.

கேள்வி: நீங்கள் மாற்றம் அவசியம் என்கிறீர்களா?

பதில்: ஆமாம். மக்களிடம் செல்வதும், மக்களுடன் மீண்டும் இணைவதும், மக்களைச் சென்றடைவதும் தவிர வேறு வழியில்லை. மக்களை வழிநடத்துங்கள், மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

கேள்வி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால், இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அதிக அக்கறை காட்டவில்லை. அதனால், மார்க்சிஸ்ட் கட்சிக்கு உங்களுடைய செய்தி என்ன?

பதில்: கம்யூனிஸ்ட் இயக்கத்தை கொள்கை அடிப்படையில் நாங்கள் ஒன்றிணைக்க இருக்கிறோம். கை தட்டக்கூட உங்களுக்கு இரண்டு கைகள் தேவை. இந்திரஜித் குப்தா, ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்களாக இருந்தபோது இரு கட்சிகளுக்கும் இடையே மாநில அளவில் ஒருங்கிணைப்புக் குழுக்களை நிறுவ ஒரு கூட்டு சுற்றறிக்கை அனுப்பினோம். ஆனால், அந்த செயல்முறையைத் தொடர முடியவில்லை. இப்போது நேரம் வந்துவிட்டது. அந்த செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கான வழியை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close