நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா? பெண்ணின் அனுபவம்

பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்த செய்திகளை நாம் ஒவ்வொரு நாளும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

பாலியல் ரீதியிலான தொந்திரவுகள், பாலியல் பலாத்காரங்கள், பெண் கடத்தல், உரிமை மறுக்கப்படுவது என ஏதேனும் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்த செய்திகளை நாம் ஒவ்வொரு நாளும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

நாடு, இனம், மதம், மொழி, வயது, பொருளாதார நிலை என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து நிலைகளிலும் வன்கொடுமை அரங்கேறிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடிய உண்மை. பச்சிளம் குழந்தை முதல் பல் போன கிழவி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் செய்தி கல் மனதையும் கரைய வைக்கும்.

பெண் பாதுகாப்புக்கு எத்தனையோ சட்டங்கள் இருப்பினும், உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண்ணின் அபலக்குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மகாபாரதக் கதையில் பாஞ்சாலி தொடங்கி இன்று வரை தொடர்கதையாக காமவெறி கொண்ட துச்சாதனர்களிடம் பெண்கள் பலியாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பெண்களுக்காக போதிய சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், இந்தச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் போதிய அளவு இல்லை. அதேபோல், ஒவ்வோரு சட்டம் இயற்றப்படும் போதும், ஏதேனும் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருப்பாள்.

பாதுகாப்புக்காக காவல்துறையின் எண்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பெண்கள் அதனை உபயோகிப்பதில்லை. தற்போதைய இந்த செய்தியும் அது போன்ற சம்பவம் ஒன்றை பிரதிபலிக்கும் சம்பவம் தான். நேற்று இரவு மது போதையில் இருந்த இளைஞர் ஒருவருடன் சென்ற பெண்ணுக்கு, மர்ம கும்பல் ஒன்றால் இழைக்கப்படவிருந்த அநீதியை தடுத்து நிறுத்திய பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு.

டுவிட்டர் பயனாளியான அந்த பெண், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தலைநகர் டெல்லியின் ஆடம்பரம் மிக்க பகுதியான ஹாஸ் காஸ் எனுமிடத்தில் இருந்து அரபிந்தோ எனுமிடத்துக்கு சென்ற போது நடந்தேறிய விஷயங்களை அடுத்தடுத்து பகிர்ந்துள்ளார்.

அதில், “பெண் ஒருவர் மது போதையில் இருந்த தனது நண்பர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அதனை கண்ட அவ்வழியே காரில் சென்ற மர்ம நபர்கள், திரும்பி வந்து அந்த பெண்ணுக்கு தொந்திரவு அளித்தனர். மேலும், அப்பெண்ணை கடத்தவும் அவர்கள் முயன்றனர். நான் தலையிட வில்லை என்றால் கண்டிப்பாக அப்பெண்ணை கடத்தியிருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,”முதலில் நான் தனியாக இருப்பதாக நினைத்த அந்த மர்ம நபர்கள் என்னை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘காவலர்களை அழை’ என எனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்தும், நண்பர்களுடன் நான் இருப்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர். நான் அவர்களை வீடியோ எடுக்க முற்படும் போது அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்” எனவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டரில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டதும், சிலர் டெல்லி காவல்துறையினரை இணைத்து டுவீட் செய்தனர். இதனையடுத்து, இதுகுறித்து டுவீட் செய்த டெல்லி காவல்துறை,”தேவையான நடவடிக்கை எடுக்க தெற்கு டெல்லி காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக” பகிர்ந்தது.

மேலும், சம்பவம் குறித்து தெற்கு டெல்லி காவல்துறை கூடுதல் துணை ஆணையாளரிடம் பேசியதாக தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அப்பெண், சம்பவம் குறித்த தகவல்களை அவர்களிடம் விளக்கியுள்ளதாகவும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close