டெல்லி பள்ளிகளில் மகிழ்ச்சி பாடத்திட்டம் - அறிமுகப்படுத்தி பேசிய தலாய் லாமா

இதனால் நாட்டில் ஊழல், தீவிரவாதம் போன்ற பிரச்சனைகள் முடிவிற்கு வரும் என்று பேச்சு

டெல்லி அரசுப் பள்ளிகளில் மகிழ்ச்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விழாவில், புத்த மதத்தலைவர் தலாய் லாமா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

எட்டாம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களுக்கு தினமும் 45 நிமிடம் இவ்வகுப்பு எடுக்கப்படும். இதில் ஐந்து நிமிடம் தியானமும் இடம் பெறுகின்றது. இப்பாடத்திட்டத்தினை 40 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து தயாரித்தார்கள்.

மகிழ்ச்சி பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி பேசிய தலாய் லாமா “மகிழ்ச்சி பாடத்திட்டம், மக்கள் மனதில் இருக்கும் வெறுமை, எதிர்மறை எண்ணங்களை போக்கும். இந்தியா போன்ற நாடுகளால் மட்டுமே பழமை மற்றும் புதுமையினை ஒன்றிணைத்து செயல்படுத்த முடியும்” என்று கூறினார். புத்த மதத் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றியும் அவர் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “டெல்லி அரசு கல்வித்துறையில் அறிமுகப்படுத்தும் மூன்றாவது திட்டம் இதுவாகும். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் உற்சாகமாக கல்வி போதிக்கும் முறையைத் தொடர்ந்து மகிழ்ச்சித் திட்டத்தினை அறிமுகம் செய்திருக்கிறது டெல்லி அரசு” என்று கூறினார்.

மகிழ்ச்சி பாடத்திட்டத்தினைப் பற்றி பேசிய டெல்லி துணை முதல்வரும் கல்வித் துறை பொறுப்பு அமைச்சருமான மனிஷ் சிசோடியா “இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் மாணவர்களும், 50,000 ஆசிரியர்களும் பயனடைவார்கள். இதனால் நாட்டில் ஊழல், தீவிரவாதம் போன்ற பிரச்சனைகள் முடிவிற்கு வரும்” என்று கூறினார்.

இந்நிகழ்வில் டெல்லி அமைச்சர்கள், கல்வி இயக்குநக அதிகாரிகள், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். தியானம், மதிப்புக் கல்வி, மனநல பயிற்சி போன்றவை இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

×Close
×Close