இறந்த மகனை மருத்துவமனையில் இருந்து தோளில் தூக்கிச்சென்ற தந்தை... மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம்!!!

மருத்துவர்கள் எந்தவித ஆம்புலன்ஸ் வசதியையும் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு.

உத்திரபிரதேச மாநிலம் இடாவா மாவட்டத்தில்,  இறந்து போன தனது மகனை அரசு மருத்துவமனையில் இருந்து தந்தை ஒருவர் தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் இடாவா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், உதய்வீர்(45) என்னும் தொழிலாளி ஒருவர், 15 வயதான தனது மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.  இது குறித்து உதய்வீர் தெரிவித்ததாவது: எனது மகனுக்கு காலில் அதிக வலி இருந்தது. ஆனால் மருத்துவர்கள் சிறிது நேரம் பார்த்துவிட்டு, எனது மகனை கொண்டு செல்லுங்கள் என கூறினார்.  மேலும், மருத்துவமனையில் இருந்து எனது மகனின் உடலை திரும்ப கொண்டு செல்ல மருத்துவர்கள் எந்தவித ஆம்புலன்ஸ் வசதியையும் செய்து கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். ஆம்புலன்ஸ் வசதி குறித்து யாரும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஒடிஸாவில் கடந்த ஆண்டு, இதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மருத்துவமனையில்  இறந்து போன மனைவியின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், தனது மனைவியின் உடலை கணவரே, தனது மகளுடன் சேர்ந்து தூக்கிச் சென்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் தான் அது. அந்த நிகழ்வு குறித்த வீடியோவானது சர்வதேச ஊடகளில் வெளியானதோடு, தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அது போல மனதை உருக்கும் சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திங்கள் கிழமை மதிய வேளையில், அந்த பையனின் உடல் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.  மருத்துவர்கள்  பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததால்,  அவருக்கு( உதய்வீர் ) ஆம்புலன்ஸ் வசதி தேவையா என்பது குறித்து கேட்கவில்லை என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இது மருத்துவமனை நிர்வாகத்தின் மீது விழுந்த கரை, தவறு எங்கள் மீது தான் உள்ளது. இது குறித்து  உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

×Close
×Close