Advertisment

மணி, மணியான நிகழ்ச்சிகளால் வைரவிழா கொண்டாட்டம் - ஹேப்பி பர்த்டே தூர்தர்சன்

Doordarshan 60th birthday : இந்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் ஒரு பிரிவான தூர்தர்சன், இன்று ( செப்டம்பர் 15ம் தேதி), வைரவிழா (60வது ஆண்டு விழா) கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் நாமும் இணைவோம்

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
doordarshan, prasar bharati, rangoli, oliyum oliuym, dd news, dd national, dd sports

doordarshan, prasar bharati, rangoli, oliyum oliuym, dd news, dd national, dd sports, தூர்தர்சன், பிரசார் பாரதி, ரங்கோலி, ஒலியும் ஒளியும், பொதிகை

இந்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தின் ஒரு பிரிவான தூர்தர்சன், இன்று ( செப்டம்பர் 15ம் தேதி), வைரவிழா (60வது ஆண்டு விழா) கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் நாமும் இணைவோம்.

Advertisment

ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்றாலே அது தூர்தர்சனாக மட்டுமே இருந்தது. 1959 முதல் தற்போது வரை தன்னாட்சி நடத்தி வருகிறது. இந்தாண்டு தூர்தர்சன் தன்னுடைய வைரவிழா ஆண்டை கொண்டாடி வருகிறது. 1982 (தேசிய ஒளிபரப்பு தொடங்கிய ஆண்டு) முதல் 1996 வரையிலான ஆண்டுகள் தமிழகத்தைப் பொறுத்தவரை, தூர்தர்சனின் பொற்காலங்கள் என்று சொல்லலாம். சன் தொலைக்காட்சி 1993 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டாலும், 1996 ஆம் ஆண்டு தேர்தலில்தான் அது தன் ஆக்டோபஸ் கரங்களைப் பரப்பத்தொடங்கியது அதுவரை தூர்தர்சனே தமிழகத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது.

தூர்தர்சன் தமிழகத்தில் தன்னாட்சி நடத்திய காலங்களில், முழுநேரமும் தமிழ் ஒளிபரப்பு இருக்காது . பகுதி நேரம் மட்டுமே தமிழ் ஒளிபரப்பு இருக்கும். மற்றைய நேரங்களில் ஹிந்தி தான் . அதனுடைய ஒளியும் ஒலியும், ஞாற்றுக்கிழமை தமிழ்த் திரைப்படம்,செவ்வாய்க்கிழமை தமிழ் நாடகங்கள் மிகப் பிரபலமானவைகள். ஒரு படத்தில் கூட ராதா ரவி, இனி ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை அரைமணி நேரத்திற்கு பதிலாக ஒரு மணி நேரம்னு ஆக்கிருவோம், எல்லாப் பயலும் நமக்கே ஓட்டக் குத்திருவாய்ங்க என்று கூறுவார் . அந்த அளவிற்கு ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி, மிகப் பிரபலம் . ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படங்கள் எவ்வளவு அரதப் பழசாக இருந்தாலும் மக்கள் உட்கார்ந்துப் பார்த்தார்கள். ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படம் M.G.R படமாக அமைந்துவிட்டால் அவ்வளவுதான்.

தூர்தர்சனின் மற்றொரு அழிக்கமுடியாத அடையாளம் "தடங்கலுக்கு வருந்துகிறோம்!". நிச்சயம் ஞாயிற்றுக்கிழமைத் திரைப்படம் ஒளிபரப்பாகும்போது, குறைந்தது இரண்டு மூன்று முறையாவது தடங்கலுக்கு வருந்துவார்கள்!!!

அக்காலங்களில் தூர்தர்சனை விட்டால் பெரிதாக வேறு பொழுதுபோக்கு ஊடகங்கள் எதுவும் கிடையாது. மக்கள் எதை ஒளிபரப்பினாலும் பார்த்தார்கள், மொழி புரியாவிட்டலும் கூட!. அப்பொழுது சனிக்கிழமைகளில் ஹிந்தித் திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். அந்த அளவு மக்கள் தூர்தர்சனைப் பார்த்தார்கள். ஒருவகையில் தூர்தர்சன் இப்படி தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தது எனலாம்...

பிறகு சிறிது சிறிதாக தமிழ் நிகழ்ச்சிகளின் நேரங்கள் அதிகரித்தன. சனிக்கிழமை ஹிந்தி திரைப்படம்,தமிழ் திரைப்படமானது. வெள்ளிகிழமைகளிலும் மேலும் ஒரு தமிழ் திரைப்படம் ஒளிபரப்பானது. பிறகு முழு நேர தமிழ் தூர்தர்சன் ஒளிபரப்பானது, ஒரு நல்ல பெயருடன், பொதிகை!.

தூர்தர்சனின் மற்றுமொரு மிகப் பெரிய சாதனை தேசிய ஒருமைப்பாட்டை ஊட்டியது. அதில் வந்த "Mile sur mera tumhara" பாடல் என்னவொரு அருமையான பாடல். அதைக்கேட்கும் போது இப்பொழுதும் எனக்கு மெய் சிலிர்க்கும். அந்தப் பாடல் ஒளிபரப்பாகும் போது, அதில் வரும் தமிழ் வரிக்காக மிக ஆவலுடன் காத்திருப்போம். ஆகா இந்திய தேசிய ஒருமைப்பாட்டுப் பாடலில் தமிழுக்கும் இடம் இருக்கிறது என்று என்னும்போது மிகப் பெருமையாக இருக்கும்.

மற்றுமொரு சிறந்த பாடல் "Baje Sargam". இப்பாடலில் ஒவ்வொரு மாநிலங்களுக்கே உரிய நடனங்களை காணும் போதும் மெய் சிலிர்க்கும். அதிலும் ஒவ்வொரு முறையும் பாரத நாட்டியம் வருவதை மனம் ஆவலுடன் எதிர்பார்க்கும். இத்தகைய நடனங்களையோ அல்லது இசையையோ உணர்ந்து ரசிக்கும் திறமை இல்லாதிருந்தபோதிலும் , நம் இந்தியா இத்துணை சிறப்பும், இத்தகைய பழம்பெருமையும், வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிருப்பதை காணும்போது மிக சிலிர்ப்பாக இருக்கும். இவ்வாறாக தேசிய ஒருமைப்பாட்டை ஊட்டுவதில் தூர்தர்சனுக்கு நிகர் தூர்தர்சனே.

தூர்தர்சனும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளத்தான் செய்கிறது. DD News, DD Sports, DD Loksabha, DD for regional languages போன்றவை அதற்கான சில எடுத்துக்காட்டுகள். தூர்தர்சன், வைரவிழா கொண்டாடும் இத்தருணத்தில் மேலும் பல பயனுள்ள நிகழ்ச்சிகள் தருவதற்கும், காலத்துடன் போட்டியிடுவதற்கும் வாழ்த்துக்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment