”’அழகற்ற’ பெண்களுக்கு திருமணமாக வரதட்சணை உதவிபுரிகிறது”: கல்லூரி பாடப்புத்தகத்தில் வரதட்சணைக்கு ஆதரவு

தனியார் கல்லூரியில் சமூகவியல் துறை புத்தகத்தில், ’வரதட்சணையின் நன்மைகள்’ என தலைப்பிடப்பட்டு, வரதட்சணைக்கு ஆதரவான வரிகள் இடம்பெற்றிருந்தது.

பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் சமூகவியல் துறை புத்தகத்தில், ’வரதட்சணையின் நன்மைகள்’ என தலைப்பிடப்பட்டு, வரதட்சணைக்கு ஆதரவான வரிகள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, சமூக வலைத்தளங்களில் பெருத்த விவாதம் கிளம்பியுள்ளது.

இந்தியாவில் இன்னும் வரதட்சணை கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 8,000 பேர் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கின்றனர் என, சமீபத்தில் தேசிய குற்றப்பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மக்களின் சமூக, அரசியல், பொருளாதார காரணிகளின் அடிப்படையில் வரதட்சணை வாங்கும் முறையும், கொடுக்கும் முறையும் மாறியிருக்கிறது. நகரங்களில் வரதட்சணை நவீனமயமாகியிருக்கிறது. இந்தியாவில், 1961-ஆம் ஆண்டிலிருந்து வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றமாகும்.

அப்படியிருக்கும்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புனித ஜோசஃப் கல்லூரியில், சமூகவியல் பாடப்பிரிவு புத்தகத்தில், வரதட்சணையின் நன்மைகள் என தலைப்பிடப்பட்டு, ஒரு பக்க அளவில் அதற்கு ஆதரவான வரிகள் இடம்பெற்றிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்ர்சைக்குரிய வரிகள் அடங்கிய பக்கத்தின் நகல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

”வரதட்சணை முறை கேடு விளைவிக்கும் என்றாலும், அதற்கான ஆதரவாளர்கள் உண்டு. அவர்களின் கருத்துபடி, வரதட்சணையால் சில நன்மைகள் விளைகின்றன.”, என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், வரதட்சணையின் நன்மைகளாக சில வரிகளும் அதில் இடம்பெற்றிருந்தன. அவற்றில் முக்கியமானவை,

1. வரதட்சணையால் ’அழகற்ற’ பெண்களுக்கு திருமணமாகும். இல்லையென்றா, அவர்களுக்கு வாழ்க்கை துணை கிடைக்காது.

2. நல்ல, அழகான மற்றும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத ஆண்களை வரதட்சணையின் மூலம் கவரலாம்.

3. வரதட்சணை மூலம் சுய தொழில் துவங்கலாம். வாழ்க்கையில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

4. ஏழை குடும்பத்தில் நன்றாக படிக்கும் ஆண்கள் வரதட்சணையால், மேல் படிப்புகளை நோக்கி முன்னேறலாம்.

5. வரதட்சணையால் கணவர் குடும்பத்தில் பெண்ணின் மதிப்பு உயருகிறது. மேலும், கணவருக்கு மனைவி மீதான காதலும், அன்பும் கூடுகிறது.

6. பல நன்மைகள் இருப்பதால் வரதட்சணை கொடுக்கலாம். ஆனால், சொத்தில் பங்கு கொடுக்கக் கூடாது.

என்பன உள்ளிட்ட பல கருத்துகள் அதில் இடம்பெற்றிருந்தன.

இதனிடையே, வரதட்சணைக்கு ஆதரவான எந்த வரிகளும் தங்களது பாடப்புத்தகத்தில் இல்லை என கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

×Close
×Close