கோயம்புத்தூரில் வழக்கு ஒன்றில் ஆஜராக டெல்லி திகார் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட கைதி சுகேஷ் சந்திரசேகர், பெங்களூரு வீதிகளில் தன் தோழியுடன் சுதந்திரமாக சுற்றித்திரிந்ததற்கும், 3 விலையுயர்ந்த கார்களை வாங்கியதற்கும் ஒத்துழைத்த போலீஸார் 7 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரனுக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். தற்போது, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் மீது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பண முறைகேடு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கோயம்புத்தூரில் சுகேஷ் மீது தொடரப்பட்ட முறைகேடு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக, அவ்வப்போது டெல்லி காவல் துறையின் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்.
இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி அந்த வழக்கில் ஆஜராவதற்காக, 9 பேர் அடங்கிய டெல்லி காவல் துறையின் பாதுகாப்புடன் கோயம்புத்தூர் அழைத்து வரப்பட்டார். அப்போது, காவல் துறையின் ஒத்துழைப்புடன் சுகேஷ் சந்திரசேகர், தன் தோழி லீனா மரியாபாலுடன் பெங்களூருவில் சுதந்திரமாக வலம் வந்ததாகவும், வணிக வளாகங்களுக்கு சென்று விலையுயர்ந்த பொருட்களை வாங்கியதாகவும், வருமான வரித்துறையினர் டெல்லி காவல் துறை ஆணையரிடம் அளித்த அறிக்கை மூலம் தெரியவந்தது. கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் தன் பாதுகாப்புக்காக வந்த டெல்லி காவல் துறையின் ஒத்துழைப்புடன், சுகேஷ் சந்திரசேகர் பெங்களூருவில் சுதந்திரமாக வலம் வந்துள்ளார். மேலும், தன் தோழி லீனா மரியாபாலுடன் வணிக வளாகங்களுக்கு சென்று, விலையுயர்ந்த பொருட்களை வாங்கியுள்ளார். மேலும், 3 சொகுசு கார்களை வாங்கிய அவர், இதுதொடர்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கார் தரகர்களிடம் பேரம் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இதில் தொடர்புடைய துணை உதவி ஆய்வாளர் ராஜேஷ், தலைமைக் காவலர்கள் ஜீவன், ஜார்ஜ், காவலர்கள் நிதின் குமார், கேசவ் குமார், தர்மேந்தர், புஷ்பேந்தர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இதன்பின், ஏழு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஏழு பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இவர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.