பால் விற்று பி.ஏ.படிக்கும் பெண்: மற்றவர்கள் கேலி செய்தாலும் ஆசிரியராகும் லட்சியத்தை கைவிடவில்லை

ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் தான் படித்து ஆசிரியர் ஆக தன் பெற்றோரிடம் பணம் இல்லாததால், வீடுகளுக்கு பால் விற்பனை செய்து படித்து...

”பிச்சைப் புகினும் கற்கை நன்றே”, என ஔவையார் அந்த காலத்தில் சொன்னது வாய் வார்த்தையாக மட்டுமல்ல. பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும் என்பது கல்வியின் மகத்துவத்தை சொல்கிறது. ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் தான் படித்து ஆசிரியர் ஆக தன் பெற்றோரிடம் பணம் இல்லாததால், வீடுகளுக்கு பால் விற்பனை செய்து படித்து வருகிறார். அவருடைய கடின உழைப்பு நிச்சயம் அவரை முன்னேற்றும்.

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் உள்ள பந்தோர் கர்ட் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதான நீது ஷர்மா. இவர் தினமும், அதிகால நான்கு மணிக்கெல்லாம் எழுந்து மாடுகள் வைத்திருக்கும் வீடுகளில் இருந்து கேன்களில் பால் சேகரிப்பார். காலை ஆறரை மணிமுதல் மோட்டார் சைக்கிளில் கேன்களை ஏற்றிக்கொண்டு கிராமத்திலிருந்து தள்ளி நகரத்திற்கு வந்து வீடு வீடாக சென்று பால் விற்பனை செய்வார்.

இவருடைய அக்கா சுஷ்மா, பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தியவர். இப்போது தன் தங்கை நீதுவிற்கு பால் விற்பனையில் துணையாக இருக்கிறார்.

நீதுவின் குடும்பத்தில் அவருடன் சேர்த்து 5 பெண்கள். அதில் இரண்டு பேர் திருமணமானவர்கள். அவர்களுக்கு கடைசியாக தம்பி ஒருவரும் இருக்கிறார். அவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

காலையில் பால் விற்பனை முடிந்தபிறகு காலை 10 மணிக்கு நீது, தன் உறவினர் ஒருவரது வீட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு, ஆடையை மாற்றிவிட்டு கணினி வகுப்புகளுக்கு செல்லுவார்.

கணினி வகுப்புகள் முடியும் வரை, சுஷ்மா தன் உறவினர் வீட்டிலேயே தங்கைக்காக காத்துக்கொண்டிருப்பார். வகுப்புகள் மதியம் ஒரு மணிக்கு முடிந்ததும் அவர்கள் மறுபடி தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டு, மாலை ஐந்து மணிக்கு மீண்டும் நகரத்திற்கு வந்து பால் விற்பனையை தொடங்குவர். இரவு ஏழரை மணிக்கு அவர்கள் வீடு திரும்புவர்.

ஏன் நீது இவ்வளவு கஷ்டப்படுகிறார். தன் கல்விக்காக. நீது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே, அவருடைய தந்தை பன்வாரி லால் ஷர்மா, “உன்னுடைய கல்விக்கு எங்களிடம் பணம் இல்லை”, என கூறியதிலிருந்து பள்ளிப்படிப்பை நிறுத்தினார் நீது.

ஆனால், நீதுவுக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என கனவு. அன்றிலிருந்து தன் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் நகரத்திற்கு சென்று பால் விற்பனை செய்யத் துவங்கினார்.

ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.5 வருமானம். இவர்களுடைய மூத்த சகோதரி சமஸ்கிருதம் பாடத்தில் முதுகலை பட்டம் படித்துவிட்டு, மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இருவரும் சேர்ந்து பால் விற்பனைக்காக மோட்டார் சைக்கிள் வாங்கினர்.

இப்போது நீது தினமும் காலையில் சுமார் 60 லிட்டர் பால் மற்றும் மாலையில் 30 லிட்டர் பால் விற்பனை செய்கிறார். வாகனத்திற்கு பெட்ரோல்செலவு போக மாதம் 12,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

அதை வைத்துதான் நீது தன் கல்வியை தொடர்ந்திருக்கிறார். தன் தந்தை பள்ளிப்படிப்பை நிறுத்தியவுடன் சோர்ந்து உட்கார்ந்துவிடவில்லை. தன் கல்விக்காக தானே உழைக்கத் துவங்கினார். இப்போது, நீது பி.ஏ. படித்து வருகிறார். தொலைதூரக் கல்வியாகத்தான் படிக்கிறார். தொழில் காரணமாக அவரால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை.

பி.ஏ. முடித்தபிறகு பி.எட். படித்து பள்ளி ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற தன் லட்சியத்தை நோக்கி நீத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

“ஒரு பெண்ணால் முடியாதது எதுவும் இல்லை என நினைக்கிறேன். நான் மோட்டார் சைக்கிள் வாகனத்தை ஓட்டியதை பார்த்து மற்றவர்கள் என்னை கேலி செய்தனர். அதனால், என்னுடைய அப்பா எனக்கு அறிவுரை வழங்கினார். இந்த மாதிரி ரோட்டில் திரிவது பெண்களின் உரிமை அல்ல என என் அப்பா எனக்கு அறிவுரை வழங்கினார். ஆனால், என்னுடைய கல்விக்காக எனக்கு பணம் வேண்டும். அதனால், நான் இந்த தொழிலை செய்கிறேன்.”, என நீது பெருமிதத்துடன் சொல்கிறார்.

“என்னுடைய இரண்டு சகோதரிகளுக்கும் திருமணமான பிறகு நான் இந்த வேலையை விட்டுவிடுவேன் என என் அப்பாவிடம் கூறியிருக்கிறேன்.”, என நீது தெரிவித்தார்.

உங்களின் கனவு மெய்ப்பட வாழ்த்துகள் நீது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close