உள்ளாடை அணிந்து விவாதம் செய்; பெண் தொகுப்பாளர் கொடுத்த பதிலடி!

நான் கோயில் போல் கருதும் இந்த பணியிடத்தில் எனது உள்ளாடையை காட்டச் சொல்கிறார்

நடிகைகள் அணியும் ஆடைகள் அடிப்படையில் இணையத்தில் ’ட்ரோல்’ செய்யப்படுவது குறித்து சமீபத்தில் ‘மிரர் நெள’ என்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஃபயே டிசெளசா (Faye D’souza) என்ற பெண் செயல்பட்டார். விவாதத்தில் பங்கேற்ற இஸ்லாமிய மதகுருவான மெளலானா யாசூப் அபாஸ் (Maulana Yasoob Abbas) என்பவர், “பெண்கள் நாகரிகமான உடைகளை அணிய வேண்டும்” என்ற ரீதியில் பேசி வந்தார். ஆனால், இந்தக் கருத்தை முன்னிறுத்தி தொடர்ந்து விவாதம் செய்யப்பட்ட போது, திடீரென அந்த பெண் தொகுப்பாளரைப் பார்த்து, ”நீ உள்ளாடை அணிந்துகொண்டு வந்து விவாதம் செய். ஆண்களுக்கு நிகராகிவிடுவாய். சமத்துவம் ஏற்பட்டுவிடும்” என்று கூறினார். அதோடுமட்டுமில்லாமல், இந்த வார்த்தைகளை அவர் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்க, அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்தார் ஃபயே டிசெளசா.

விவாதத்தில் பங்கேற்ற மற்றவர்களை அமைதியாக இருக்குமாறு சொன்ன ஃபயே டிசெளசா, கேமராவைப் பார்த்துப் பேச தொடங்கினார். அதில் ”நான் கோயில் போல் கருதும் எனது இந்த பணியிடத்தில் எனது உள்ளாடையை காட்டச் சொல்கிறார் மெளலானா ஜி. அவர் கூறிய கருத்தால் நான் ஆவேசம் அடைவேன் என்று அவர் நம்புகிறார். நான் என் நிலைத் தடுமாறி, என் வேலையைச் செய்ய மறந்துவிடுவேன் என நம்புகிறார். நான் உங்களை மாதிரி பலரையும் பார்த்திருக்கிறேன் மெளலானா ஜி. உங்களைப் பார்த்து பயப்படவில்லை. உங்கள் கருத்தால் நான் அதிர்ந்துபோகவில்லை. சனா ஃபாத்திமா, சானியா மிர்சா மற்றும் பல பெண்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். அவர்களின் உடைகளையும் அவர்களையும் விமர்சித்தால், நடுங்கிப்போய் சமையலறைக்குள் ஓடிவிடுவார்கள் என நினைக்கும் ஆண்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகில் நீங்கள் மட்டுமே ஆட்சி செய்ய அனுமதிக்கமாட்டோம். நாங்கள் எங்கும் ஓடிவிடமாட்டோம்” என்றார் மிக தீர்க்கமாக.

அதன்பிறகும் தன் நிலைப்பாட்டுக்கு நியாயம் சேர்க்க முயற்சி செய்தார் மெளலானா. ஆனால், அது எடுபடவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close