”ரயிலில் இருக்கை பிரச்சனையால் தான் ஜூனைத் கொலை செய்யப்பட்டான்”: காவல் துறை அதிகாரி சொல்கிறார்

"ரயிலில் இருக்கை தொடர்பான பிரச்சனையாலேயே ஜூனைத் கொலை செய்யப்பட்டான். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு இல்லை”: ரயில்வே காவல்துறை அதிகாரி

ஜூனைத் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், ரயிலில் இருக்கை தொடர்பான பிரச்சனையாலேயே ஜூனைத் கொலை செய்யப்பட்டதாகவும், மாட்டிறைச்சி விவகாரத்தால் அல்ல எனவும் ரயில்வே காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாடுகள், காளைகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதனால், மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் பசு பாதுகாவலர்கள் அமைப்பினரால் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாட்டிறைச்சி குறித்து பொதுவெளியில் பேச கூட மக்கள் தயங்குகின்றனர்.

இந்நிலையில், ஹரியானாவை சேர்ந்த ஜூனைத் என்ற 16 வயது சிறுவன், டெல்லி – ஹரியானா ரயிலில் மதுரா ரயில் நிலையத்தில், நண்பர்களுடன் ரம்ஜான் பண்டிகையையொட்டி புத்தாடைகள் வாங்கிவிட்டு திரும்புகையில் கும்பல் ஒன்றால் கொலை செய்யப்பட்டான். மேலும், ஜூனைத் கான் உடன் பயணித்த அவனின் நண்பர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். ரயிலில் இருக்கை தொடர்பான பிரச்சனையால் ஜூனைத் கான் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ரயிலில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தாலேயே ஜுனைத் கான் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இச்சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், ஜுனைத் கான் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். அந்நபர், மஹாராஷ்டிராவின் துலே பகுதியில் கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே காவல் துறை அதிகாரி ஒருவர் ரயிலில் இருக்கை தொடர்பான பிரச்சனையாலேயே கொலை செய்யப்பட்டதாகவும், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு இல்லை எனவும் தெரிவித்தார்.

×Close
×Close